

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சொர்க்க வாசலை கடந்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது. அதன்பின், உபயதாரர் மரியாதையுடன் பொது ஜனசேவை நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
தங்க குதிரை வாகனத்தில்.. ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (ஜன.17) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு வையாளி வகையறா கண்டருளுகிறார். இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு உபயதாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
விழாவின் 10-ம் திருநாளான 19–ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். வரும் 20-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.