தஞ்சாவூர் பெரிய கோயிலில் 2 டன் காய்கனி, இனிப்புகளால் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம்

படம்: ஆர்.வெங்கடேஷ்
படம்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நந்தியம்பெருமானுக்கு நேற்று 2 டன் காய்கனிகள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான நேற்று பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின், நந்தியம்பெருமானுக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு என சுமார் 2 டன் எடையிலான பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின், கோயில் வளாகத்தில் 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் பூசி, மாலை அணிவித்து, பட்டுத் துணி போர்த்தி கோ பூஜை செய்யப்பட்டது.

விழாவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணைத் தலைவர் மேத்தா மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், நந்தியம்பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in