

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘சிவ சிவ’ என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
சைவத் திருத்தலத்தில் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பல்வேறு ரதங்களில் சுவாமி வீதி உலா வர, விழா களைகட்டத் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (ஜன.12) நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆயிரம்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. மாலை 4.15 மணிக்கு ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்பாளும் மேளதாளம் முழங்கிட, தேவாரம், திருவாசகம் பாடிட, வேத மந்திரங்கள் முழங்கிட, தீவட்டிகள் முன்னே செல்ல புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப பகுதியில் முன்னும் பின்னும் சென்று நடனமாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.
அப்போது பக்தர்கள் ‘சிவ சிவ’ என்ற பக்தி முழக்கமிட்டு கண்டு களித்தனர். இதனைத்தொடர்ந்து சிவாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி ஞானாகாச சித் சபையில் பிரவேசம் செய்தனர்.
இன்று (ஜன.14) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. 15-ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணை செயலாளர் சுந்தர தாண்டவ தீட்சிதர் மற்றும் கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
விழாவை முன்னிட்டு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நகரம் முழுவதும் பக்தர்கள் குவிந்திருந்தனர். தெப்ப உற்சவம் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.