

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக இன்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத பவுர்ணமி அன்று திருவாதிரை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்தித்துடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து, சிவபெருமானை வழிபடும் நாள். திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து நாட்களில் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகிறது.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் நடராஜப் பெருமானுக்கு பால் தேன் இளநீர் பன்னீர்,சந்தனம், பன்னீர், விபூதி போன்ற பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடராஜ பெருமானை வழிபட்டு அருள் பெற்று பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.
மேற்கு தாம்பரம் அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில் இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் சுவாமி உட்பிரகார உற்சவம் தீபாராதனை பக்தர்களுக்கு திருவாதிரைகளி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பொழிச்சலூர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் மாட வீதியில் சாமி வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற இறை அருள் பெற்று சென்றனர்.
நந்திவரம் நந்தீசுவரர் கோயில், காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில், பம்மல் அர்க்கீசுவரர் கோயில், நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில், பாலூர் ஸ்ரீ பாலபதங்கீஸ்வரர் திருக்கோயில்,சோகண்டி, ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் முள்ளிப்பாக்கம், ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் , பெருந்தண்டலம், ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் இள்ளலூர், அருள்மிகு ஸ்ரீ சுயம்பீஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு அருகே தென் மேல்பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமுக்காடு அருள்மிகு திருமுக்காடிஸ்வரர் திருக்கோவில், வல்லம் அருள்மிகு வேதாந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட சிவ ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்தனர்.