

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் | அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் ||
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் | குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு ||
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! |
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் |
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே |
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 28)
கண்ணா! ஆயர் குல மக்களாகிய நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, கட்டுச்சாதம் உண்பவர்கள். அதிக ஞானம் இல்லாதவர்கள். எங்களுக்கு தலைவனாக நீ கிடைத்தது, நாங்கள் செய்த பெரும்பேறு. உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உன்னை நாராயணன், மாமாயன், மாதவன், வைகுந்தன், தாமோதரன், பத்மநாபன், கேசவன், கோவிந்தன் என்று பெயர் சொல்லி அழைக்கிறோமே என்று எங்கள் மீது கோபம் கொள்ளாதே. நாங்கள் ஏதும் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா! உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக என்று பெண்கள் கண்ணனிடம் உரிமையோடு வேண்டுகின்றனர் .
அனைவருக்கும் அருள்பாலிப்பவன் ஈசன்…!
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
(திருப்பள்ளியெழுச்சி 8)
என்னை ஆட்கொண்ட சிவபெருமானே! பார்வதிதேவியின் அடியவர்களின் எளிய வீடுகளுக்கு வந்தருளும் ஈசனே! உலகத்தைப் படைத்த முதல்வனான நீ அனைவருக்கும் நடுநாயகமானவன். பிரம்மதேவர், திருமால் உள்ளிட்டோராலேயே உன்னை அறியமுடியாதபோது, மற்றவர்கள் உன்னை எப்படி அறிய முடியும்? திருப்பெருந்துறை கோயிலை எனக்கு காட்டி அருளினாய். அந்தணர் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். உடனே நீ துயில் எழுவாயாக என்று மாணிக்கவாசகர் சிவபெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். இறைவன் மிக எளிமையானவன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஈசனை வணங்க எதுவுமே வேண்டாம் நல்ல உள்ளம் இருந்தால் மட்டுமே போதும் என்று இப்பாடல் உணர்த்துகிறது.