மகா அலெக்சாண்டருக்குப் பாடம் சொன்ன காகம்

மகா அலெக்சாண்டருக்குப் பாடம் சொன்ன காகம்
Updated on
1 min read

மகா அலெக்சாண்டர் தனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இறவா வரம் வேண்டி அலைந்தார். எல்லாரும் இப்படியான ஒன்றுக்காகக் காலம் காலமாகத் தேடி அலைபவர்கள்தான். அலெக்சாண்டரும் அலைந்தார். அதைத் தேடித் தேடிக் கண்டும் பிடித்தார். அத்தனை சக்திவாய்ந்தவர் அல்லவா.

ஒரு காட்டில் பயணம் செய்தபோது அங்கு தவம் செய்த ஞானிகளில் ஒருவர், ஒரு குகை வழியைக் காட்டி, அதற்குள் உள்ள சுனையில் நீர் அருந்தினால், அருந்துபவர்களுக்கு மரணமே இல்லை என்று கூறினார்.

அலெக்சாண்டர் புத்திசாலியாக இருந்திருந்தால், இறவாமைக்கு வழிசொன்ன ஞானி அந்த நீரை அருந்தினாரா என்று நிச்சயமாக கேட்டிருந்திருப்பார். ஆனால் கேட்கவில்லை. அத்தனை அவசரம். அந்தக் குகையைச் சென்றடைவதற்குள் அவர் இறந்துபோய்விட்டால் என்ன செய்வது? அதனால் அவசரமாகக் குதிரையை ஓட்டிகொண்டு போனார்.

குகையை அடைந்தார். அதற்குள் ஓடிக்கொண்டிருந்த நீர்ச் சுனையைப் பார்த்தார். குகையின் இருட்டுக்குள் ஸ்படிகம் போல தெள்ளத்தெளிவாக இருந்த நீரைப் பார்க்கும்போதே அது ஜீவ நீர் என்று உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார். சுனையின் முனையில் அமர்ந்து கைகளைச் சேர்த்து நீரை அள்ளிப் பருகப் போனார் அலெக்சாண்டர்.

அந்தக் குகையின் இருட்டு மூலையில் உட்கார்ந்திருந்த காகம் ஒன்று, “நிறுத்து… தயவுசெய்து அந்த நீரைப் பருக வேண்டாம்” என்றது.

அலெக்சாண்டர் காகத்தைத் திரும்பிப் பார்த்து, “என்ன சொல்கிறாய்? இந்த நீரை நீ பருகியிருக்கிறாயா? இதில் என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

காகம் தன் கதையைக் கூறியது. “நான் அந்த நீரைக் குடித்தேன். தற்போது எனக்கு மரணமே இல்லை. ஆனால் நான் தற்போது இறக்க விரும்புகிறேன். ஆனால் முடியாது. எனது வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த வாழ்க்கையின் மூலமாக அன்பு என்றால் என்னவென்று தெரிந்துகொண்டேன்.

வெற்றியை அறிந்துகொண்டேன். நான் காகங்களின் அரசனாக ஆனேன். தற்போது எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமே இல்லை. நான் அறிந்த எனது சகாக்கள் அனைவரும் இறந்து போய்விட்டனர். அவர்கள் ஓய்வில் உள்ளனர். எனக்கு ஓய்வு இல்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தேன்.

ஆனாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. நீங்கள் இந்தத் தண்ணீரைப் பருகும் முன் எனது நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் இந்தக் குகையின் நீரைக் குடிக்கலாம்” என்று மாமன்னர் அலெக்சாண்டரிடம் காகம் விண்ணப்பம் வைத்தது.

மரணம் என்ற முடிவு இல்லையெனில் வாழ்க்கை என்பது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றாக மாறிவிடும். அன்பிற்கு எதிர்மறையான ஒன்று இல்லாவிடில், அன்பு என்பதே தாங்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.

அன்பானவர்களிடமிருந்து பிரியும்போதுதான் அந்த உறவு அர்த்தமுள்ளதாக மாறும். இல்லையெனில் எல்லா விஷயங்களும் சலிப்பாகிவிடும். வாழ்க்கை, எதிரெதிரான அம்சங்களில்தான் இருக்கிறது. அதனால்தான் அது மிக சுவாரசியமாகவும் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in