பக்தனின் சேவகனை போற்றுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 25

பக்தனின் சேவகனை போற்றுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 25
Updated on
1 min read

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் |
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, ||
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த |
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் ||
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை |
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில், ||
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி |
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 25)

தேவகியின் மகனாகப் பிறந்த கண்ணன், கோகுலத்தில் யசோதை மைந்தனாக வளர்ந்தான் கண்ணன். இதனாலேயே, ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளித்து வளர்க்கப்பட்டதாக’ இப்பாசுரம் தொடங்குகிறது. கம்சனின் அனைத்து சதித்திட்டங்களையும் முறியடித்து வெற்றி கண்டான் கண்ணன். கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன், வத்சாகரன், பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன் என அனைவரும் கண்ணனால் அழிக்கப்பட்டனர். அதனால் தனக்கு அழிவு நெருங்குவதால், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல் கம்சன் தவித்தான். இப்படி வீரச்செயல்கள் புரிந்த கண்ணனை போற்றிப் புகழ்ந்து, தாங்கள் வேண்டும் வரங்களை அளிக்கும்படி பாவை நோன்பிருக்கும் பெண்கள், அவனை வேண்டுகின்றனர்.

எம்பெருமான் புகழ் பாடி மகிழ்வோம்..!

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி 5)

குளிர்ந்த வயல்களால் சூழப்பெற்ற திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! பஞ்ச பூதங்களாக விளங்கும் ஈசனே! உன் சிறப்பு இயல்புகளைப் பாடும் புலவர்கள், பெருமைகளைச் சொல்லி ஆடும் பக்தர்கள் யாரும் உன்னைக் கண்டதில்லை. உடனே நீ எங்கள் முன்னர் தோன்றி, எங்கள் பாவங்களைத் தீர்த்து, எங்களை ஆட்கொள்ள வேண்டும். அதற்காக நீ உடனே துயில் நீங்கி எழ வேண்டும் என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். பிறப்பு, இறப்பு இல்லாத பரமன் என்றும் நிரந்தரமானவன். நம் சக்திக்கு அப்பாற்பட்ட எம்பெருமானை பாடி மகிழ்ந்தாலே அவன் நம் கண்களுக்கு தெரிந்து விடுவான் என்பதை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in