

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.
ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு மங்களநாதர் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் சாமி காப்பு கட்டுதல் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மங்களநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் உற்சவர் அன்னம், ரிசபம், மயில், பூதகணங்கள், பல்லக்கில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஜன.12 அன்று காலை 8 மணிக்கு மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனம் காப்புப் படி களைதல் மற்றும் 32 வகையான அபிஷேகங்கள், மூலிகை தைலம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜன.13 அதிகாலை 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல் மற்றும் பக்தர்கள் தரிசனம், அன்று மாலை மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தல், கூத்தர் பெருமான் வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) இரவு காப்புகட்டுதல் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலை மற்றும் மாலையில் மாணிக்கவாசகர் தங்ககேடயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும், நடராஜருக்கு தினமும் சிறப்பு மகா தீப ஆராதனையும் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜனவரி 13 அன்று அதிகாலை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்னைய தினம் நடராஜருக்கும், அம்பாளுக்கும் தங்க கவசம் அணிவிக்கப் பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறும்.