Published : 26 Jul 2018 11:23 am

Updated : 26 Jul 2018 11:23 am

 

Published : 26 Jul 2018 11:23 AM
Last Updated : 26 Jul 2018 11:23 AM

விவிலிய மாந்தர்கள் 03: கீழ்ப்படிதலுக்கு ஒரு நோவா!

03

பூமியில் வாழ்ந்த கெட்ட மனிதர்களுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் நீதிமானாகவும் குற்றமற்றவராகவும் இருந்தார். அவர் கடவுள் காட்டிய வழியில் நடந்தார். குடும்பத்தினரையும் தன் வழியில் அவர் வழிநடத்தினார். அவரே நோவா. அதனால் அவர் கடவுளுக்குப் பிரியமானவராக இருந்தார்.

ஆதாமின் பரம்பரையில் வந்த லாமேக் என்பவரின் மகனாகப் பிறந்தார் நோவா. அவர் பிறந்தபோது “கடவுள் சபித்த இந்த மண்ணில் நாம் படாத பாடுபடுகிறோம்; ஆனால், இவன் நமக்கு ஆறுதல் தருவான்” என்று கூறி, நோவா எனப் பெயர் சூட்டப்பட்டார். நோவாவின் காலத்தில் மனித இனம் பல்கிப் பெருகியிருந்தது. ஆனால், கடவுளுக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற பக்தி இல்லை. பக்தி இல்லாத காரணத்தால் மனிதர்கள் மத்தியில் நீதி இல்லாமல் இருந்தது. நீதி இன்மையால் வன்முறை தலைதூக்கித் திரிந்தது.


‘மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதையும், அவர்களுடைய உள்ளத்தின் எண்ணங்களும் ஆசைகளும் எப்போதும் மோசமாகவே இருந்ததையும் கடவுள் கவனித்தார்.

பூமியில் மனிதர்களைப் படைத்ததை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். அதனால் “நான் படைத்த மனிதர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அவர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்போகிறேன். வீட்டு விலங்குகள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரிகள் எல்லாவற்றோடும் சேர்த்து அவர்களை அழிக்கப்போகிறேன்” என்று கடவுள் கூறியதை விவிலியத்தின் தொடக்க நூல் வெளிப்படுத்துகிறது. ஆனால், தன் சாயலாகப் படைத்த மனித இனத்தை முற்றாக அழிப்பதற்குக் கடவுள் விரும்பவில்லை.

கடவுளின் கருணை 

நோவாவிடம் கடவுள் பேசினார். “வானத்தின் கீழிருக்கிற எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். அதற்காகப் பெரிய வெள்ளத்தைக் கொண்டு வரப்போகிறேன். அப்போது பூமியிலுள்ள எல்லா உயிர்களும் இறந்துபோகும். ஆனால், நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். நீ, உன் மனைவி, உன் மகன்கள், உன் மருமகள்கள் ஆகியோரையும் உங்களோடு சேர்ந்து மற்ற உயிர்களையும் நான் காப்பாற்றப்போகிறேன்.

அதற்காக கொப்போர் மரத்தைப் பயன்படுத்தி நீ ஒரு பேழையை கட்டு. அதில் அறைகளை அமைத்து, அதன் உள்ளேயும் வெளியேயும் தார் பூசு. பேழையின் நீளம் 300 முழமும், அகலம் 50 முழமும், உயரம் 30 முழமும் இருக்க வேண்டும். வெளிச்சம் வருவதற்காகப் பேழையின் கூரைக்குக் கீழே ஒரு முழம் விட்டு ஜன்னல் வை. பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவைப் பொருத்து.

கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களையும் அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். கடவுள் கூறியபடியே வெள்ளம் வருமா, வராதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்துகொண்டிராமல், தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் கடவுள் காட்டிய கருணையைக் கண்டு, கடவுளின் சொற்களுக்கு அப்படியே கீழ்ப்படிந்து பேழையைக் கட்டும் வேலையை நோவா தன் குடும்பத்தினருடன் சேர்ந்து தொடங்கினார்.

விமர்சனங்கள் வீழ்த்தவில்லை

கடவுள் குறிப்பிட்ட அளவிலேயே நோவா பேழையைக் கட்டத் தொடங்கினார். தன் மகன், மனைவி உள்ளிட்ட குடும்பத்தாரின் கடும் உழைப்பில் அந்தப் பேழை மெல்ல உருப்பெற்றுவந்தது. நாட்கள் உருண்டோடின. பேழையைக் கட்டுவது நோவாவுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. ஆனால் நோவா சோர்ந்துவிடவில்லை. நோவாவின் குடும்பத்தைப் பார்த்த மற்ற மனிதர்கள் என்ன நினைத்திருப்பார்கள். ‘இவன் என்ன முட்டாளா; பூமி பெருவெள்ளத்தால் அழியப்போகிறது’ என்பதை ஏன் இவன் நம்ப வேண்டும் என்று கிண்டல் செய்திருப்பார்கள்.

ஆனால் கடவுளின் சொற்களை மனத்தை விட்டு விலக்காத நோவா, இதுபோன்ற விமர்சனங்களால் மனத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கடவுளின் கட்டளையை நிறைவேற்றி முடித்தார். அதேபோல நோவா செய்தால் அது சரியாகவே இருக்கும், அவர் கடவுள் கூறுவதைத் தட்டமாட்டார் என்று அவரது குடும்பத்தார் அனைவரும் நோவாவின் பக்திக்கும் அவரது தலைமைத்துவத்துக்கும் மதிப்பளித்தனர்.

நோவாவின் இந்த விசுவாசத்தைப் பற்றி விவிலியத்தின் எபிரேயர் புத்தகம் இப்படிக் கூறுகிறது, “அதுவரை வெள்ளம் என்ற ஒன்றைப் பார்க்காத நோவா, அதைப் பற்றிக் கடவுளிடமிருந்து எச்சரிக்கை கிடைத்தபோது, கடவுள் மீதான தனது பயத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டினார். இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார். அதே விசுவாசத்தால்தான் நீதிமான்களில் ஒருவரானார்.’

பெருவெள்ளத்தின் சாட்சி

“உன்னோடும் உன் குடும்பத்தினரோடும் சேர்த்து மற்ற ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என்று ஒரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ” எனக் கடவுள் உத்தரவிட்டதால் அவ்வாறே நோவா செய்தார். தனது குடும்பத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்பதற்குத் தேவைப்படும் எல்லா வகையான உணவையும் பேழைக்குள் சேமித்து வைத்தார். கடவுள் கூறியபடியே பெருவெள்ளம் வந்தது. பூமியின் சகல உயிர்களையும் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களையும் பெருவெள்ளம் அழித்தது.

அந்த அழிவின் மாபெரும் சாட்சியாக மட்டுமல்ல; கடவுளது மீட்பின் சாட்சியமாகவும் நோவா இருந்தார். நோவா உட்பட அவரது குடும்பத்தினர் எட்டுப் பேரும் நோவா தேர்ந்துகொண்ட உயிரினங்களும் உயிர்பிழைத்தனர். பூமியில் மனித இனம் புத்துயிர்பெற, நாம் இன்று உயிரோடு இருக்க, நோவா எனும் பெருமகனின் கீழ்ப்படிதலே காரணமாக இருந்தது. மண்ணில் மனித இனம் மறுமலர்ச்சி அடைய நோவா எனும் மூப்பனின் தெய்வ பக்தியே ஆதாரம்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x