கண்ணனின் அருள்மழையில் நனைவோம்..! | மார்கழி மகா உற்சவம் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று |
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்; ||
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு |
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்; ||
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் |
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; ||
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை |
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 20)
தானே வலியச் சென்று அனைவருக்கும் அருள்பாலிக்கும் திருமாலின் குணநலன்களும் நப்பின்னை பிராட்டியின் அழகும் இப்பாசுரத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன. “தேவர்களை, இரண்ய கசிபு கொடுமைப்படுத்தியபோது, நரசிம்ம அவதாரம் எடுத்து அவர்களை, மகாவிஷ்ணு காத்தருளினார். தேவர்களை காக்கும்பொருட்டு ராவணனை அழிப்பதற்காக, ராமாவதாரம் எடுத்தார். அனைவரது துயர் துடைக்கும் கலியுக தெய்வமான கண்ணனே! பகைவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக! அலைமகள் மகாலட்சுமிக்கு நிகரான நப்பின்னை பிராட்டியே! உடனே கண்ணனை எழச் செய்து, எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றைக் கொடுத்து எங்கள் நோன்புக்கு உதவுவாயாக!” என்று கண்ணனையும் நப்பின்னையையும், ஆண்டாளின் தோழிகள் வேண்டுகின்றனர்.
சிவபெருமானின் பாத தரிசனம் பெறுவோம்..!
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் |
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் ||
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் |
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் ||
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் |
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் ||
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் |
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை 20)
சிவபெருமானே! அனைத்துக்கும் முதலாகவும், முடிவாகவும் உள்ள உனது திருவடிகளை நாங்கள் பணிகின்றோம். அனைத்து உயிர்களையும் படைக்கும் உன் பொற்பாதங்களை சரண் புகுகின்றோம். அனைத்து உயிர்களுக்கும் அவர்கள் வாழ்வில் இன்பம் அளிக்கும் மலரடிகளை வணங்குகின்றோம்.
உயிர்களுக்கு நற்பேறு அளிக்கும் காலடிகளை போற்றுகின்றோம். திருமால், பிரம்மதேவரால் காணமுடியாத தாமரைப் பாதங்களைக் கண்டு பெருமிதம் அடைகிறோம். மீண்டும் பிறப்பற்ற நிலை தரும் பொற்பாதங்களைப் பற்றுகிறோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உனது நினைவுகளுடன், மலர்கள் நிறைந்த நீர்நிலைகளில் நாங்கள் நீராடி மகிழ்கிறோம் என்று தோழியர், சிவபெருமானை வேண்டி வணங்குகின்றனர். சிவபெருமானின் பாத தரிசனம் கிடைத்தால் அதுவே பெரும்பேறு என்கிறார் மாணிக்கவாசகர்.
