சபரிமலை சிறப்பு தரிசன திட்டத்தில் குளறுபடி: தேவசம் போர்டு மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

பம்பையில் இருந்து சபரிமலை சந்நிதானம் செல்ல, மரக்கூட்டம் வழியாக அனுமதிக்கப்பட்ட பாரம்பரிய வனப்பாதையில் வந்த பக்தர்கள்.
பம்பையில் இருந்து சபரிமலை சந்நிதானம் செல்ல, மரக்கூட்டம் வழியாக அனுமதிக்கப்பட்ட பாரம்பரிய வனப்பாதையில் வந்த பக்தர்கள்.
Updated on
2 min read

திருவண்ணாமலை: சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய பாரம்பரிய வனப்பாதை வழியாக யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைக்கான சிறப்பு தரிசன திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, திட்டத்தை செயல்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என தேவசம்போர்டு போர்டு மீது பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு பெற்று, மகர விளக்கு பூஜைக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வனப்பாதை(பெரு வழி பாதை) வழியாக வரும் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்கான “சிறப்பு தரிசனம்” திட்டத்தை தேவசம்போர்டு கடந்த டிசம்பர் 18-ம் தேதி தேவசம்போர்டு அறிவித்தது.

முக்குழி தாவளம், புதுச்சேரி தாவளம் மற்றும் செரியானவட்டம் ஆகிய 3 இடங்களில் ’சீல்’ வைக்கப்பட்ட முன்னுரிமை அடையாள சீட்டுடன் வரும் ஐயப்பப் பக்தர்களுக்கு மரக்கூட்டம் வழியாக சபரிமலை பெரிய நடைப்பந்தல் இடத்துக்கு செல்வார்கள். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருக்காமல், 18-ம் படி முன்பு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தேவசம்போர்டு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக திடீரென நேற்று (ஜனவரி 1-ம் தேதி) அறிவித்துள்ளது.

வனப்பாதை வழியாக வரும் பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் 10 நாட்களில் சிறப்பு தரிசன திட்டம் முடிவுக்கு வந்துள்ளது என தேவசம்போர்டு மீது பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “சபரிமலை ஆன்லைன் பதிவில், பம்பை வழி, எருமேலி (பாரம்பரிய வழி), புல் மேடு வழியாக வருகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதில் எருமேலியில் இருந்து அழுதாமலை, கரிமலை வழியாக சந்நிதானத்துக்கு 46 கி.மீ., தொலைவு வரும் பக்தர்கள் குறித்த தகவலும் இடம்பெற்றது. இதனால் பாரம்பரிய வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதன்படி, சிறப்பு தரிசனம் என்ற திட்டத்தை அறிவித்த 10 நாளில் தேவசம்போர்டு ரத்து செய்துவிட்டது. தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 25 ஆயிரம் பக்தர்கள், வனப்பாதை வழியாக வந்துள்ளதாக கூறி, முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் ரத்து செய்துள்ளது.

எருமேலியில் இருந்து வனப்பாதை தொடங்குகிறது. ஆனால், இவர்கள் 20 கி.மீ., தொலைவில் உள்ள முக்குழி தாவளத்தில் முன்னுரிமை அடையாள சீட்டு வழங்குகின்றனர். எருமேலியில் இருந்து முக்குழி வரை வாகன போக்குவரத்து உள்ளன. பக்தர்கள் எளிதாக வந்துவிடுகின்றனர். மேலும் முக்குழி தாவளத்தில் முன்னுரிமைக்கான அடையாள சீட்டு பெற்றவர்கள், வனப்பாதையில் செல்லாமல் திரும்பும் நிலையும் உள்ளது. புதுச்சேரி தாவளத்தில் அடையாள சீட்டில் 2-வதாக சீல் வைக்கப்படுகிறது.

இதில் ஒருவருக்கு ஒரு சீட்டு என அறிவிக்கப்பட்டாலும், பக்தரின் அடையாள குறியீடு இல்லாததால், ஒருவரே மீண்டும் வரிசையில் நின்று அடையாள சீட்டில் சீல் வைத்து கொள்ளும் நிலை இருக்கிறது. இதனை கண்காணிக்க, போதிய எண்ணிக்கையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் கிடையாது. 3-வதாக செரியானவட்டத்தில், அடையாள சீட்டில் சீல் வைக்கின்றனர். இந்த இடம் வழியாக கரிமலை அடிவாரம் வரை பக்தர்கள் சென்று திரும்ப கட்டுப்பாடு இல்லை. இதனால், அடையாள சீட்டில் யார் வேண்டுமானாலும் சீல் வைத்து கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி, மகரவிளக்கு பூஜைக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டபோது, பாரம்பரிய வனப்பாதை வழியாக வந்த பக்தர்கள் அலைகழிக்கப்பட்டனர். பம்பையில் உள்ள நடைப்பந்தலில், பம்பை - சந்நிதானம் செல்லும் பக்தர்கள் கூட்டத்துடன் அனுப்பப்பட்டனர். மேலும் மரக்கூட்டம் வழியாக அனுமதிக்கப்பட்டபோது, மந்தையில் ஆடுகளை அடைத்து வைப்பதுபோல் அடைத்து வைத்து அனுப்பப்பட்டனர். அப்போது பம்பையில் இருந்து சந்நிதானம் சென்ற பக்தர்களும், வனப்பாதையில் நடந்து வந்த பக்தர்கள் கூட்டத்தில் நுழைந்தனர்.

நடைப்பந்தலை சென்றடைந்தவுடன், 18-ம் படி ஏற அனுமதிக்கப்படவில்லை. புல்மேடு வழியாக (12 கி.மீ., தொலைவு) வரும் பக்தர்களுக்கான பாதையில் அனுப்பப்பட்டனர். இதில், சிறிய பாதையில் வந்தவர்களும் எளிதாக நுழைந்தனர். பிரத்யேக பாதை ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். திட்டம் அறிமுகப்படுத்த ஓரிரு நாட்கள் மட்டுமே, வனப்பாதை வழியாக சென்ற பக்தர்கள், எளிதாக சுவாமி தரிசனம் செய்தனர் என தேவசம்போர்டு அறிவித்தது. அதன்பிறகு அலைகழிக்கப்பட்டனர். கேரள காவல்துறையின் அணுகுமுறையும் ஏற்புடையதாக இல்லை. மேலும், 10 நாட்களிலேயே சிறப்பு தரிசன திட்டத்தை ரத்து செய்துவிட்டனர்.

வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை அடையாள சீட்டில் தொழில்நுட்ப குறியீடு இல்லை. இதுதான், வனப்பாதை வழியாக தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது என தேவசம்போர்டு அறிவித்ததற்கு காரணமாக இருக்கிறது. 46 கி.மீ., தொலைவு உள்ள பாரம்பரிய வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு, 18-ம் படி ஏறி சந்நிதானத்தில் சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்க வேண்டும்.

காளைகெட்டி வனப்பகுதி, அழுதா மலை ஏற்றம், கல்லிடுங்குன்று அல்லது இஞ்சிபாறைக்கோட்டை, கரிமலை உச்சி மற்றும் கரிமலை அடிவாரத்தில் முன்னுரிமைக்கான அடையாள சீட்டு வழங்கி, பக்தர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும். மேலும் பக்தர்களின் விரல் ரேகை பதிவு அல்லது க்யூஆர் கோடு பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதனை நடைமுறைப்படுத்துவது எளிதானதாக இருக்கும். வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன திட்டத்தை மறுசீரமைப்பு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in