

பெங்களூரு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அமெரிக்காவில் வழிநடத்திய‘குருதேவுடன் உலகம் தியானிக்கிறது’ தியான நிகழ்வு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. உலக தியான நாளில், 8.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தியானத்தில் பங்கேற்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘குருதேவுடன் உலகம் தியானிக்கிறது’ என்ற நிகழ்வு கின்னஸ் உலக சாதனை, ஆசிய புத்தக சாதனை மற்றும் உலக சாதனை சங்கத்தில் இடம்பிடித்து சாதனைகளின் பட்டியலில் இணைந்தது. ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு, உலகம் முழுவதிலிருந்தும் மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த தியானத்துக்கான புதிய அளவுகோலை உருவாக்கியது.
முதல் உலக தியான நாள், ஒருமைப்பாடு மற்றும் உள்ளார்ந்த அமைதியின் ஒருமையான கொண்டாட்டமாக அமைந்தது. 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் தியானத்தின் மாற்றத்திறனை உலக அளவில் வெளிப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையில் தொடங்கிய நிகழ்வு, நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தின் உச்சியில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரால் நடத்தப்பட்ட நேரடி தியானத்துடன் நிறைவுற்றது.
இந்நிகழ்வு ,இணையதளத்தில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் யூடியூப் வழியாக வழிநடத்தப்பட்ட தியானத்தில் பங்கேற்றனர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. ஒரே நாளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் அதிகபட்ச பங்கேற்பு மற்றும் ஒரே நாளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகபட்ச பங்கேற்பாளர்கள் என்ற அடிப்படையில் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. உலக சாதனை சங்கத்தில், 24 மணி நேரத்தில் யூடியூப்-ல் அதிகபட்ச பார்வைகள் கிடைத்த ஆன்லைன் தியானம், நேரடி வழிநடத்தப்பட்ட தியானத்தில் அதிகமான பங்கேற்பாளர்கள் மற்றும் ஒரே தியானத்தில் பங்கேற்ற பல்வேறு தேசியங்களை சேர்ந்தவர்களின் சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வழிநடத்தலின் கீழ் நடைபெற்ற இந்த தியானம் நேரடி ஒளிபரப்பாக நடைபெற்றது. மில்லியன் கணக்கானோர் இணையதள வழியாகவும், பெரிய குழுக்களாகவும் கூடிவந்து நேரடியாகவும் தியானத்தில் பங்கேற்று உலக அமைதிக்காக இணைந்தனர். தியானத்துக்கு முன்பு, ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தியானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். “தியானம் என்பது சிந்தனையில் அறிந்ததை உணர்ச்சியாக உணர்வதற்கான பயணமாகும். தியானம் செய்ய முதலில் அதிக சிந்தனையிலிருந்து உணர்ச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், அந்த உணர்ச்சியை தாண்டி உள்ளார்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டும். உங்கள் மனதை அமைதியாகவும் உணர்வுகளால் செறிவடையவும் மாற்ற வேண்டுமெனில் தியானம் அவசியம்.
தியானம் செயல் பூர்வமற்றது அல்ல; அது உங்களை மேலும் பலகட்டமாகவும் அமைதியாகவும் மாற்றும். நீங்கள் ஒரு மாற்றத்தின் முதன்மை வீரராக இருக்க வேண்டும் என்றால், தியானம் மிகவும் அவசியம்.” என்றார். இந்த முயற்சிக்கு உலகம் முழுவதிலுள்ள தலைவர்களும், பிரபலங்களும், விளையாட்டு வீர்களும், தொழில்முனைவோரும், மாணவர்களும், விவசாயிகளும் பாராட்டுத் தெரிவித்து பெருமை சேர்த்தனர்.
விவசாயிகள், பார்வை குறைவுள்ள குழந்தைகள், நிறுவனங்கள், ராணுவத்தினர், மருத்துவ உதவியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வீட்டுத்தலைவர்கள் மற்றும் சிறைக்கைதிகள் என அனைத்து தரப்பினரும் தியானத்தின் அற்புத சக்தியால் ஈர்க்கப்பட்டனர்.இந்த மாபெரும் முயற்சியால் ‘குருதேவுடன் உலகம் தியானிக்கிறது’ நிகழ்வு தியானத்தின் மாற்றத்திறனை வெளிப்படுத்தும் உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. வாழும் கலை அமைப்பு, மில்லியன் கணக்கான மக்களை தியானத்தால் ஒன்றிணைத்து உள்ளார்ந்த அமைதிக்கான இயக்கத்துக்கு ஒளியை பரப்பியுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.