வை​குண்ட ஏகாதசியை முன்னிட்டு திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி கோயி​லில் ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

வை​குண்ட ஏகாதசியை முன்னிட்டு திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி கோயி​லில் ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
Updated on
1 min read

சென்னை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜன.10-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது.

பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இக்கோயிலில் பெருமாளை வழிபட்டுள்ளனர். இந்த கோயிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து நேற்று முன்தினம் (டிச.31) தொடங்கியது. ஜன. 9-ம் தேதியுடன் பகல்பத்து பத்தாம் திருநாள் நிறைவடைகிறது. பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தவகையில், பகல்பத்து 2-ம் திருநாளான நேற்று வேணுகோபாலன் திருக்கோலத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகல் பத்து முடிந்து இராப்பத்து தொடங்கும் ஏகாதசி நாளான ஜன.10-ம் தேதி பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிகாலை 4.15 மணிக்கு உள்பிரகார வழிபாடு நடக்கிறது.

காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது. ஜன.20-ம் தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஜன.11-ம் தேதி மற்றும் 19-ம் தேதி ஆகிய 2 நாட்கள் காலையும், 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 7 நாட்கள் மாலை 4.15 மணிக்கும் பரமபத வாசல் சேவை நடைபெறுகிறது. மேலும், ஜன.5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in