

தேனி: வனப்பாதையில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு தரிசன திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
வனப்பாதை வழியே சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் புல்மேடு மற்றும் எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை எனப்படும் பாரம்பரிய வழித்தடத்தில் செல்கின்றனர்.
இதில் எருமேலி வனச்சாலை அழுதாநதியில் இருந்து சுமார் 30 கிமீ. தூரம் கடுமையான ஏற்றம், இறக்கத்துடன் கூடிய கரடுமுரடான பாதை ஆகும். பனி, மழை உள்ளிட்ட மோசமான காலநிலையைக் கடந்து சிரமத்துடன் இவர்கள் சந்நிதானத்துக்கு செல்கின்றனர். இவ்வாறு வரும்போது சந்நிதானத்தில் மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. ஆகவே தங்களை முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்ற தேவசம்போர்டு கடந்த 18-ம் தேதியில் இருந்து இந்த பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தியது. இதனால் மண்டல பூஜையின் நிறைவு காலத்தில் பலரின் தரிசனம் எளிமையாக இருந்தது. ஆனால் மகரவிளக்கு பூஜை காலம் தொடங்கிய முதல்நாளில் பாதயாத்திரை பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. ஆகவே சிறப்பு திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேவசம் போர்டு உறுப்பினர் எ. அஜிகுமார் கூறியதாவது: ''தற்போது சந்நிதானத்தில் பக்தர்களின் கூட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வனப்பாதையில் வரும் பக்தர்களை சிறப்பு வரிசையில் அனுமதிப்பதால் மற்ற பக்தர்கள் பல மணி நேரம் கூடுதலாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே சிறப்பு அனுமதி அட்டை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வனப்பாதை வழியே அதிகபட்சமாக 5 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்துவிட்டது. ஆகவே இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''முன்அறிவிப்பு இன்றி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆர்வமுடன் வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பல ஆண்டு கோரிக்கை இது. ஆனால் சில வாரங்கள் கூட செயல்படுத்த முடியாத நிலையில் நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. ரத்து அறிவிப்பு தெரியாததால் பக்தர்களுக்கும், போலீஸாருக்கும் கடும்வாக்குவாதம்தான் ஏற்பட்டது'' என்றனர்.