

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி, நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடப்பாண்டுக்கான வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து, பகல்பத்து உற்சவம் எனும் திருமொழி திருநாள் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின பாதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், பவளமாலை, காசுமாலை, முத்துச்சரம், அடுக்குப் பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, 8.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அங்கு காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன்நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். பின்னர், அலங்காரம் அமுது செய்ய திரையிடப்பட்டது.
மாலை 4 மணி முதல் 6 மணிவரை உபயதாரர் மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். காலை 7.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.45 மணிமுதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சேவை நடைபெற்றது.
வாத்திய கருவிகள்: ஸ்ரீரங்கம் கோயிலில் நாள்தோறும் நடைபெறும் வைபவங்களில் 10 வகையான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா காலங்களில் மட்டும் பெரியமேளம், நாகசுரம், டக்கை. சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உட்பட 18 வாத்திய கருவிகள் வாசிக்கப்படும்.