

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெரிசல் ஏற்பட்டதால் நிலக்கல்லில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை முதல்நாளான இன்று சிறப்பு வழிபாடாக சந்தன அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் சந்நிதானத்தில் அதிகரித்ததால் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நிலக்கல்லிலே தடுத்து நிறுத்தப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சந்தன அபிஷேகம் முக்கிய வழிபாடாக இருந்து வருகிறது. மதிய உச்சபூஜைக்கு முன்பு இது நடைபெறும். இந்நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக நேற்று(டிச.30) நடை திறக்கப்பட்டது. முதல்நாள் வழிபாடான இன்று சந்தன அபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் கணபதி ஹோம மண்டபத்தில் தொடங்கியது. இதற்காக சந்நிதானத்திலே தயாரிக்கப்பட்ட சந்தனம் பிரம்மகலசத்தில் நிறைக்கப்பட்டது.
பின்பு இதற்கு மாலை அணிவித்து தந்திரி கண்டரரு ராஜீவரு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் செய்தார். தொடர்ந்து இதனை மேல்சாந்தி அருண்குமார்நம்பூதிரி ஏந்திப்பிடித்தபடி கோயிலை வலம் வந்தார். செண்டாமேளம், நாதஸ்சுரம் உள்ளிட்ட மேளதாளம் முழங்க, சங்கொலியுடன் சந்நிதானப்பகுதியில் சந்தன பவனி உற்சவம் நடைபெற்றது. பின்பு ஐயப்பன் கோயிலை வந்தடைந்து சுவாமிக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்களுக்கு சந்தன பிரசாதம் வழங்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜை வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்ட நாளில் சுமார் 40ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நெரிசல் ஏற்பட்டு தரிசனத்துக்கான நேரமும் அதிகரித்தது. ஆகவே ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நிலக்கல்லிலே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒரு மணிநேரத்துக்குப் பின்பு பம்பை செல்ல அனுமதிக்கப்பட்டனர். வனப்பாதை வழியே வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டையை இன்று காலையில் பல்வேறு காரணங்களைக் கூறி போலீஸார் ஏற்க மறுத்தனர். இதனால் பக்தர்கள் போலீஸாருக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. ஆகவே பல பக்தர்களும் சிறப்பு தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.