

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தொடங்கிய திருப்புகழ் திருப்படித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆகிய நாட்கள் திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்தாண்டுக்கான திருப்புகழ் திருப்படித் திருவிழா, இன்று காலை வெகுவிமரிசையாக தொடங்கியது.
ஓர் ஆண்டை குறிக்கும் வகையில், மலையடிவாரத்திலிருந்து கோயிலுக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள 365 படிக்கட்டுகள் தொடங்கும் சரவணப் பொய்கை அருகே காலை 8 மணியளவில், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் இணை ஆணையர் ரமணி ஆகியோர் முதல் பஜனை குழுவினரை வரவேற்று, முதல் படியில் பூஜை செய்து, திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கோயில் ஊழியர்கள், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து முருகன் கோயிலுக்கு சென்றனர்.
தொடர்ந்து, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும் திருப்புகழ் பாடியவாறு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதுமட்டுமல்லாமல், ஏராளமான பெண் பக்தர்கள், ஒவ்வொரு படியிலும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி கோயிலுக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்கினர்.
மேலும், திருப்புகழ் திருப்படித் திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணியளவில், சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கிரீடம் மற்றும் வேல், பச்சை மாணிக்க மரகதகல், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 11 மணியளவில், முருகன், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி தேரில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வுகளில், சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், பள்ளிப்பட்டு உள்ளிட்ட தமிழக பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 400-க்கும் மேற்பட்ட போலீஸார் திருத்தணி முருகன் கோயில், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.