

ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்டம் ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.
மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தொடர்ந்து திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.
மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும், பின்னர் கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும். மேலும் இந்தியாவிலிருந்து எத்தனை பயணிகளை அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.