

மூலவர்: வடமூலநாதர் அம்பாள்: அருந்தவ நாயகி
தல வரலாறு: ஒருசமயம் சூரிய சந்திரரின் ஒளி இல்லாமல் உலகம் இருளில் மூழ்கியது. அன்னை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்தியதால் இச்சம்பவம் நிகழ்ந்தது. அப்போது சிவபெருமான் பார்வதியிடம், “விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே. ஆகவே இதற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் சென்று தவம் செய்து இறுதியாக யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்” என்றார். அதன்படி பார்வதி யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகி எனப்படுகிறாள்.
கோயில் சிறப்பு: பழு என்றால் ஆலமரம். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால், திருப்பழுவூர் என பெயர் பெற்றது. எனவே சுவாமி ‘ஆலந்துறையார்’ எனப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவனுக்கு சாம்பிராணித் தைலம் பூசப்படுகிறது. பங்குனி 18-ல் சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்.
சிறப்பு அம்சம்: பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் பரசுராம தீர்த்தம் எனப்படுகிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் கமல கணபதி, முருகன், பஞ்சபூத லிங்கங்கள். மகாலட்சுமி, லிங்கோத்பவர் அறுபத்துமூவர், சிவ துர்க்கை சந்நிதிகள் உள்ளன.
பிரார்த்தனை: பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், பிரிந்த தம்பதி ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
அமைவிடம்: அரியலூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 12 கிமீ தூரத்தில் கீழப்பழுவூர் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.00 மாலை 4.30-8.30 வரை.