

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நள்ளிரவு கோலாகலமாக நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி `கீழை நாடுகளின் லூர்து நகர்' என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இங்குள்ள அன்னை ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச.25) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் விழா தொடங்கியது. அங்குள்ள சேவியர் திடலில் இரவு 11.30 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, மறையுரை, கூட்டுத் திருப்பலி நடைபெற்றன. பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கில மொழிகளில் சிறப்பு திருப்பலிகளை பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் நடத்தி வைத்தனர்.
திருப்பலிகளின் நிறைவில் நள்ளிரவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை ஏசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பித்தார். பின்னர், குழந்தை இயேசு சொரூபம் பக்தர்களின் பார்வைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வேளாங்கண்ணி பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.