மகா சிவராத்திரி: ஈஷா சார்பில் ரத யாத்திரை சேவை தொடக்கம்

மகா சிவராத்திரி: ஈஷா சார்பில் ரத யாத்திரை சேவை தொடக்கம்
Updated on
1 min read

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா சார்பில் ரத யாத்திரை சேவை தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷாவின் தென் கயிலாய பக்தி பேரவையின் சார்பில், ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது. ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நடப்பாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளில் பயணிக்க உள்ளன. மகா சிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் இந்த ரதங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளன. இதன் தொடக்க விழா கோவை ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று வடக்கு, மேற்கு திசைகள் நோக்கிச் செல்லும், ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர்.

அப்போது பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசும்போது, ''மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் வரும் மகா சிவராத்திரையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். இவ்விழா நம் திருக்கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் மூலவர் இருப்பதை போல் ஆதியோகி இங்கு இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார். இந்த ரதங்களில் உள்ள ஆதியோகி திருமேனிகள் உற்சவ மூர்த்திகளை போல் ஊர்தோறும் பயணித்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றனர்'' என்றார்.

முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in