

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் |
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? ||
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு |
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி ||
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை |
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் ||
மெள்ள ழுந்து அரியென்ற பேரரவம் |
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் ||
(திருப்பாவை 6)
பெண்ணே..! பறவைகள் குரலெழுப்பி கூவத் தொடங்கி விட்டன. இன்னுமா உறங்குகிறாய்? பறவைகளுக்கு அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலிலிருந்து வெண்சங்கின் பேரோளி உன் காதில் விழவில்லையா? நமது கண்ணன், வஞ்சனையால் வந்த பேய் மகள் பூதனை மார்பில் தடவிய நஞ்சை உண்டவன். சகடாசுரனை எட்டி உதைத்த திருவடிகளையுடையவன். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன். முனிவர்களும், யோகிகளும் ‘ஹரி’ என்று அவன் பெயரைச் சொல்லி அழைக்கின்றனரே.. அந்தப் பேரொலி உன்னைக் குளிர வைக்கவில்லையா? உடனே எழுந்து வா என்று தன் தோழியை, பரமன் புகழ்பாடி மார்கழி நீராட அழைக்கிறாள் கோதை.
இறைவனின் புகழ் பாடுவோம்!
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை |
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே ||
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ |
வானே நிலனே பிறவே அறிவரியான் ||
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் |
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் ||
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் |
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை 6)
மானின் நடையை உடையவளே! அதிகாலை நேரத்தில் நீயே வந்து எங்களை எழுப்புவாய் என்று நேற்று கூறினாய். ஆனால் நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படி ஆகி விட்டது. சொன்னபடி செய்ய வேண்டாமா? வானவர்கள், பூவுலகில் உள்ளவர்கள் என்று யாராலும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் புகழ் பாடி வந்த எங்களுக்கு இன்னும் நீ பதில் கூறாமல் இருக்கிறாய். இறைவனை நினைத்து உன் உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. உடனே எழுந்து வந்து, அனைவரும் பயன்பெறும் விதத்தில் இறைவனைப் புகழ்ந்து பாட வா என்று தோழியர், உறங்கும் தோழியை அழைப்பதாக மாணிக்கவாசகர் கூறுகிறார்.