ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்: டிச.25-ம் தேதி வெள்ளி ரத ஊர்வலம்

ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்: டிச.25-ம் தேதி வெள்ளி ரத ஊர்வலம்
Updated on
1 min read

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. 25-ம் தேதி வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறுகிறது.

வடசபரி என்று போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படியுடன் பரிவார தெய்வங்களுடன் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி கட்டி, பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

இந்த கோயிலில் கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, ரூ.4.50 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விநாயகர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயர் சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை (டிச.21) தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு, சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி டி.கே.மோகன் உள்ளிட்டோர் கொடி ஏற்றுகின்றனர்.

இரவு திரவிய பூஜை, 1008 கலசங்கள் ஸ்தாபனம், ஸ்ரீபூத பலி, தீபாராதனை நடைபெறுகிறது. 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 18-ம் படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். 25-ம் தேதி காலை கணபதி ஹோமம், உஷ பூஜை, ஸ்ரீபூத பலி அபிஷேகம், தீபாராதனையும், இரவு 7 மணிக்கு ஐயப்ப சுவாமி வெள்ளி ரத ஊர்வலமும் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து, சயன பூஜை தீபாராதனையும், தீர்த்தவாரி நிகழ்ச்சி 26-ம் தேதி பட்டினப்பாக்கத்திலும் நடக்க உள்ளன. பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in