

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் | ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ||
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் | பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ||
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து | தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் ||
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் | மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ||
(திருப்பாவை 4)
கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த வருண பகவானே! கடலுள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகாயத்தில் ஏறி, மழையை வரவைப்பாய். பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய்வாய். வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் உரக்கக் குரல் கொடுப்பாய். சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல் நிற்காமல் மழையைப் பெய்ய விடுவாய். உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும். நாங்களும் மார்கழியில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும். அது உன் அருளால்தான் நடைபெறும் என்று கண்ணனை வேண்டுகிறாள் கோதை.
வேதப்பொருளான இறைவனை வணங்குவோம்!
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ | வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ ||
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் | கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே ||
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை | கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம் ||
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து | எண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை 4)
ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் தோழியே! இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை? என்று தோழியர் கேட்டதும், உறங்கிக் கொண்டிருந்த பெண், “பச்சைக்கிளி போல் பேசும் அனைத்து தோழிகளும் வந்துவிட்டனரா?” என்று வினவுகிறாள். தோழிகள் அனைவரும் ஒரே குரலில், “உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்களை இனிமேல்தான் எண்ண வேண்டும். தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப்பாடி உள்ளம் உருகும் வேளையில், அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? எவ்வளவு பேர் வந்துள்ளோம் என்று நீயே பார்த்துக் கொள். நீ எதிர்பார்க்கும் பேர் இல்லையென்றால் மீண்டும் சென்று உறங்கு” என்று கேலி செய்தனர்.