சபரிமலை ஆன்லைன் பக்தர்களிடம் தலா ரூ.10 திரட்ட முடிவு - உயிரிழக்கும் பக்தர்கள் குடும்பத்துக்கு உதவ திட்டம்

சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக படியேறி வரும் பக்தர்கள்.
சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக படியேறி வரும் பக்தர்கள்.
Updated on
1 min read

குமுளி: சபரிமலையில் இதய பாதிப்பு போன்றவற்றினால் உயிரிழக்கும் பக்தர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆன்லைன் பக்தர்கள் மூலம் தலா ரூ.10 வீதம் விருப்ப நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோயிலுக்கான பெரும்பாலான பாதைகள் வனத்திலே அமைந்துள்ளன. இதில் செங்குத்தான ஏற்றம், பள்ளம் நிறைந்து இருப்பதுடன் கரடுமுரடான பாதையாகவும் உள்ளது. இதனால் பலரும் சபரிமலையின் அடிவாரமான பம்பை வரை வாகனத்தில் வந்து பின்பு சந்நிதானத்துக்கு சுமார் 7கிமீ. மலைச்சாலையில் ஏறிச் செல்கின்றனர். உடல்நலம் குன்றியோர், மத்தியவயதை கடந்தவர்களுக்கு இது சவாலாக இருக்கிறது. இருப்பினும் பக்திபரவசத்துடன் செல்வதால் இவர்களுக்கு சிரமம் தெரிவதில்லை.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் சுவாசம் மற்றும் இதயப்பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற நிலையைத் தவிர்க்க ஆட்டோமேட்டிக் எக்ஸ்டெர்னல் டிபைபிரிலேட்டர் (ஏஇடி) எனும் இதய தற்காப்பு முதலுதவி கருவிகளை பம்பை முதல் அப்பாச்சி மேடு வரை உள்ள அவசர உதவி மருத்துவ மையங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “கடந்த ஆண்டில் மலையேறும் போது இதய பாதிப்பினால் 48 பேர் உயிரிழந்தனர்.

இது போன்ற நிலையைத் தடுக்க முதற்கட்டமாக வரும் 20-ம் தேதி முதற்கட்டமாக 5 ஏஇடி கருவிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் உடன் இத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதய பாதிப்பு ஏற்பட்டால் 10 நிமிடங்களில் இந்த கருவியைப் பயன்படுத்தினால் மரணத்தை 80 சதவீதம் குறைக்க முடியும். வருங்காலத்தில் பம்பை முதல் சந்நிதானம் வரை ஒவ்வொரு அரை கிலோ மீட்டரிலும் இந்த இயந்திரத்தை பயன்பாட்டுக்கு வர திட்டமிட்டுள்ளோம். விபத்தில் இறப்பவர்களுக்கு மட்டுமே தற்போது தேவசம்போர்டு சார்பில் காப்பீட்டுத்திட்டம் உள்ளது.

ஆகவே இதயம் உள்ளிட்ட பாதிப்பில் இறப்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பிரத்யேக நிதி உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு செய்பவர்களிடம் விருப்ப கட்டணமாக ரூ.10 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கட்டாயமல்ல. இதன் மூலம் பிரத்யேக நிதி உருவாக்கப்படும். இதய பாதிப்பு உள்ளிட்டவற்றினால் மரணம் அடையும் பக்தர்களுக்கு இந்த நிதி மூலம் தலா ரூ.5லட்சம் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in