சபரிமலைக்கு குடும்பத்தினருடன் வரும் பெண்களுக்காக பம்பையில் ஏசி இளைப்பாறுதல் மையம்! 

பம்பையில் பெண்களுக்கான இளைப்பாறுதல் மையத்தை திறந்து வைத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த். 
பம்பையில் பெண்களுக்கான இளைப்பாறுதல் மையத்தை திறந்து வைத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த். 
Updated on
1 min read

குமுளி: சபரிமலைக்கு குடும்ப உறுப்பினர்களுடன் வரும் பெண்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் பம்பையில் இளைப்பாறுதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 50 பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கு உட்பட்ட பெண்களே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனத்துக்குச் செல்ல அனுமதி கிடையாது. இருப்பினும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மிக பயணமாக வரும் பெண்கள் பம்பை வரை வரலாம். தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்து திரும்பும் வரை இவர்கள் பம்பையில் உள்ள தங்கள் கார்களிலோ, நிழற்கூரைகளிலோ காத்திருப்பர்.

தங்கள் குழந்தைகளுக்கு சந்நிதானத்தில் முதன்முதலாக சோறூட்டும் நேர்த்திக்கடன்களை பலரும் இங்கு நிறைவேற்றுவது வழக்கம். இதற்காக தம்பதியராக குடும்பத்துடன் வரும் பெண்கள் குழந்தையை சபரிமலை செல்லும் தனது கணவரிடம் கொடுத்து விட்டு பம்பையிலே காத்திருப்பதும் உண்டு. இது போன்றவர்களுக்கு உரிய வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இதற்காக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் இவர்களுக்காக பம்பையில் இளைப்பாறுதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் திறந்து வைத்தார். பம்பை கணபதி கோயில் அருகில் ஆயிரம் சதுரஅடியில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இந்த மையம் செயல்படுகிறது. இதில் பாலூட்டும் அறை, கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. திறப்பு விழா நிகழ்ச்சியில் பம்பை தனி அலுவலர் ஜெயசங்கர், செயற்பொறியாளர்கள் ராஜேஷ் மோகன், ஷியாம்பிரசாத், பம்பை தேவசம் போர்டு நிர்வாக அலுவலர் ஷிபு. உதவி பொறியாளர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், ''குடும்ப உறுப்பினர்கள் தரிசனம் முடிந்து வரும் வரை சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த மையத்தில் பாதுகாப்பாகவும், ஓய்வாகவும் தங்க முடியும். ஒரே நேரத்தில் 50 பேர் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கு உட்படாத பெண்கள் சபரிமலைக்கு வரும்போது பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு இந்த மையத்தில் தங்க வைத்து பின்பு திருப்பி அனுப்பப்படுகின்றனர்'' என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in