

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா காப்புக் கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை விழாவன்று பக்தர்கள் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகைத் திருவிழா நேற்று மாலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, தண்டாயுதபாணி சுவாமி, விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், மயிலுக்கு காப்புக் கட்டப்பட்டது. முன்னதாக முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி, தினமும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற உள்ளன. சின்னக்குமார சுவாமி தங்கச் சப்பரத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரும் 12-ம் தேதி கருவறையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. 13-ம் தேதி கார்த்திகைவையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. மாலை 4.45 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். மலைக் கோயிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெற உள்ளது.