Published : 04 Jul 2018 16:45 pm

Updated : 04 Jul 2018 17:11 pm

 

Published : 04 Jul 2018 04:45 PM
Last Updated : 04 Jul 2018 05:11 PM

ஆன்மா என்னும் புத்தகம் 10: அறிவின் முட்செடிகளைக் களையெடுப்போம்

10

சூபி அறிஞரும் எழுத்தாளருமான இத்ரிஸ் ஷா, மேற்குலகுக்கு சூபி தத்துவங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். இஸ்லாம் மார்க்கத்தின் மறைஞானமாகவும், தனிப்பட்ட பரிமாணமாகவும் புரிந்துகொள்ளப்படும் சூபி ஞானம், முகம்மது நபிகள் காலத்துக்கும் முந்தையது என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார் இத்ரிஸ் ஷா. இவரது சிறந்த படைப்பாக இன்றளவும் ‘தி வே ஆஃப் தி சூபி’ (The Way of The Sufi) புத்தகம் விளங்குகிறது.

அறிஞர்களின் அறிமுகம்


மெய்ஞ்ஞானிகள், கவிஞர்களான கஸாலி, உமர் கய்யாம், அத்தர், இபின் எல்- அரபி, சாடி, ஹக்கிம் சானாயி, ஹக்கிம் ஜாமீ, ஜலாலுதீன் ரூமி ஆகிய எட்டு அறிஞர்களை இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்துகிறார் இத்ரிஸ் ஷா. அத்துடன், ‘சிஷ்டி’, ‘குவாத்ரி’, ‘ஷுராவார்தி’, ‘நக்ஷ்பந்தி’ ஆகிய சூபியின் நான்கு கட்டளைகளையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சூபி கதைகள், விடுகதைகள், பழமொழிகளையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் இத்ரிஸ் ஷா.

திறந்த மனமே சிறந்தது

பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டில் பிறந்த சூபி கருத்துகளில் பொதிந்திருந்த உளவியல் கருத்து நிலைகளும் நடைமுறைகளும் இருபதாம் நூற்றாண்டில்தான் பிராய்ட், யுங் போன்றவர்களால் ‘கண்டுபிடிக்கப்படுகின்றன’ என்கிறார் இத்ரிஸ் ஷா. சீரமைப்பும் போதனைகளும் உண்மையான ஆன்மிகத்தின் எதிரி என்று கஸாலி மேற்கோள்காட்டுவதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். பெரும்பாலான மனிதர்கள் அவர்களிடம் வழங்கப்படும் நம்பிக்கைகளை எந்தவிதக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களால், உண்மையான ஞான மார்க்கத்தை அடைய முடிவதில்லை.

இந்தக் கருத்தை விளக்குவதற்காக அப்துல் அஸ்ஸிஸ் என்ற ஏழாம் நூற்றாண்டு சூபி அறிஞரின் கதையை விளக்குகிறார் ஷா. “ஒரு கழுதையிடம் பழக் கலவையைக் கொடுத்தால், எந்தமாதிரியான முட்செடி இது என்றுதான் அது கேட்கும்”. முட்செடிகளை மட்டுமே நாம் அறிந்துவைத்திருந்தால், நமக்கு வேறு எதுவுமே நல்லதாகத் தெரியாது. இந்தக் கருத்தை மனிதர்களுக்குப் பொருத்திப் பார்க்கும்போது, நம்முடைய மனங்கள், ஏற்கெனவே நமக்குள் நிலைபெற்றிருக்கும் அறிவின் முட்செடிகளுக்குத்தான் சாதகமாகச் செயல்படும். அதற்கு, வெளியில் அற்புதமான ஞானம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றித் தெரியாது.

ஒரே மார்க்கம், ஒரே தத்துவம்தான் உண்மை என்று நம்பி, அதில் சிக்கிக்கொண்டிருப்பது சூபியின் வழி கிடையாது. அதற்கு மாறாக, எதிர்த்தரப்பில் இருக்கும் கருத்துகளுடன் இணைந்து நமக்கு விடுதலையை அளிக்கும் திறந்த மனத்தை வளர்த்துகொள்வதாக அது இருக்கிறது.

சூபி ஞானம்

சூபியிசத்தை ஒரு கலாச்சார, மத இயக்கமாகப் படிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும் ஷா, “அப்படிப் படித்துமுடித்த பிறகும், அதிலிருந்து எந்த அர்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் வெளியே வரமுடியும்” என்கிறார். சூபி துறவி சாடியின் இந்த மேற்கோளை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார் அவர். “பேசுவதற்கு மட்டுமே விழையும் கற்றறிந்த மனிதனால் மற்றொரு மனிதனின் அகத்துக்குள் எப்போதும் ஊடுருவவே முடியாது”.

சூபி ஞானத்தைப் பட்டப்படிப்புகளின் வழியாக அடைய முடியாது. அதனால்தான் அதன் போதனைகள் எல்லாம் மரபுக் கதைகள், விடுகதைகள், நகைச்சுவை போன்ற அம்சங்களால் விளக்கப்படுகின்றன. “சூபித்துவம் என்பது எந்த வடிவமும் அற்ற உண்மையாகும்” என்னும் சூபி துறவி இபின் எல் ஜலாலியின் கருத்தை இந்தப் புத்தகத்தில் வழிமொழிகிறார் ஷா.

சூபியின் வழி

உண்மையான சூபிக்கள், தாங்கள் வாழும் கலாச்சாரத்தைக் கடக்க முயல மாட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மொழி, வழக்கங்கள், முன்முடிவுகள், மார்க்கம் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிகபட்ச விளைவை ஏற்படுத்துவார்கள். மனிதனிடம் இருக்க வேண்டிய உண்மையான செல்வம் அறிவும் ஞானமும்தாம். மற்றவை எல்லாம் தற்காலிகமானவைதாம். இந்தக் கருத்தைத்தான் பல சூபி கதைகள் முன்வைக்கின்றன. ஒரு சூபி மாணவன், உண்மை எந்த வடிவத்தில் வந்தாலும் அதைத் திறந்த மனத்துடன் வரவேற்பான்.

சூபியிசம், மறைஞானமாக விவரிக்கப்பட்டாலும், ஆய்ந்த உண்மையின் வளத்தை இந்த உலகில் பெருகச் செய்வதே அதன் உண்மையான நோக்கமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட மனித ஞானத்தின் ஆற்றலை சூபியிசம் வழியாகப் புரிந்துகொள்ளலாம். வாழ்வின் உறக்க நடை கதியைக் கலைத்து விழிப்பின் உயர்நிலையைத் திறக்கும் சாத்தியமாக சூபித்துவம் உள்ளது என்கிறார் இத்ரிஸ் ஷா.

5chgow_idries-shahrightஇத்ரிஸ் ஷா

இத்ரிஸ் அபுதாஹிர் ஷா, 1924-ம் ஆண்டு, சிம்லாவில் பிறந்தார். இவரது குடும்பம் அவர் பிறந்தவுடனே இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்ததால், லண்டனிலேயே படித்து வளர்ந்தார். கீழைத்தேய உலகின் பாரம்பரிய போதனைகளை மேற்கு உலகத்துக்கு விளக்குவதில் இவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

சூபி துறவிகள் சிலரைத் தன் முப்பதாவது வயதில் சந்தித்த பிறகுதான், அவருக்கு சூபி ஞானம் அறிமுகமானது. அதற்குப் பிறகுதான், இவர் ‘ஓரியண்ட்ல் மேஜிக்’ (Oriental Magic), ‘டெஸ்டினேஷன் மெக்கா’ (Destination Mecca) போன்ற நூல்களை எழுதினார். சமூக, கலாச்சார பிரச்சினைகளில் ஆர்வம்கொண்ட அவர், ‘கலாச்சார ஆராய்ச்சி மையத்தை’ நிறுவினார்.

‘தி சூபிஸ்’ (The Sufis), ‘திங்கர்ஸ் ஆஃப் தி ஈஸ்ட்’ (Thinkers of The East), ‘விஸ்டம் ஆஃப் தி இடியட்ஸ்’ (Wisdom of the Idiots) போன்ற 35 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் 1996-ம் ஆண்டு மறைந்தார்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x