சபரிமலையில் 20 ஆண்டுகளாக அறிவிப்பு சேவை - அசத்தும் கர்நாடக பக்தர்

சபரிமலையில் 20 ஆண்டுகளாக அறிவிப்பு சேவை - அசத்தும் கர்நாடக பக்தர்
Updated on
1 min read

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், வழிகாட்டும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக கர்நாடக பக்தரின் 6 மொழி அறிவிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜையை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், விதிமுறைக்கு உட்படுத்தவும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக சன்னிதானத்தில் தேவசம்போர்டு சார்பில் அறிவிப்புகள் ஒலிபெருக்கியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பக்தர்களுக்கு வழிகாட்டவும், வழிதவறியவர்களை மீட்கவும் இந்த அறிவிப்புகள் உறுதுணையாக இருக்கின்றன. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் பையரவல்லி கிராமத்தைச் சேர்ந்த எம்.எம்.குமார்(49) என்பவரின் குரல்தான் இங்கு 6 மொழிகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.

பம்பை, நிலக்கல்லில் ஒலித்த இவரது அறிவிப்புகள் இந்த ஆண்டு முதல் சன்னிதானத்திலும் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு தகவல்களை அறிவித்து வருகிறார். இவருக்கு உதவியாக கோழஞ்சேரியைச் சேர்ந்த கோபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலகணேஷ், நரசிம்மமூர்த்தி ஆகியோரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து குமார் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் ஊராட்சி உறுப்பினராக இருக்கிறேன். கேட்டரிங் பணி செய்கிறேன். சேவை செய்யும் நோக்கில் ஆரம்பத்தில் பம்பையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டேன். பின்பு 20ஆண்டுகளாக அறிவிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். முதல் 6ஆண்டுகள் சேவையாக செய்தேன். தற்போது தேவசம்போர்டு தினமும் ரூ.750 அளிக்கிறது. இப்பணி மனநிறைவாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இங்கு தவறாமல் வந்து விடுவேன். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை பக்தர்களுக்கு வழங்கி விடுவேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in