Published : 13 Jun 2018 17:58 pm

Updated : 13 Jun 2018 17:58 pm

 

Published : 13 Jun 2018 05:58 PM
Last Updated : 13 Jun 2018 05:58 PM

ஆன்மா என்னும் புத்தகம் 07: அவை தவளைகளாகவே இருக்கின்றன

07

ஜென் என்ற சொல்லை இன்றைய அன்றாட வாழ்க்கைச் சூழலில் அடிக்கடி எதிர்கொள்கிறோம். முதன்முதலில் இந்தச் சொல் ஜப்பானில் பவுத்தம் பரவியபோதுதான் உருவானது. ஜப்பானில் தனித்துவமான இயல்புகளுடனும் பயிற்சிகளுடனும் இயங்கிய பவுத்தம் ‘ஜென் பவுத்தம்’ என்று அறியப்படுகிறது. டெய்செட்ஸ் டி. சுஸுகி (Daisetz T. Suzuki) என்பவரால் ஜென் தத்துவம் மேற்குலகுக்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்தது.

ஆனால், ஷுன்ரியு சுஸுகி 1960-களில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் தொடங்கிய ‘ஜென் பயிற்சி’ மையம்தான் ஜென் தத்துவத்தின் தாக்கம் மேற்குலகில் நிலைபெறுவதற்குக் காரணமாக அமைந்தது. இவரின் ‘Zen Mind, Beginner’s Mind: Informal Talks on Zen Meditation and Practice’ என்ற புத்தகம் 1970-ம் ஆண்டு வெளியானது. ஷுன்ரியு சுஸுகியின் உரையாடல்களிலிருந்து தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம் வாழ்க்கையில் ஜென் பயிற்சியை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்தை எளிமையாக விளக்குகிறது.


கற்றுக்குட்டியின் மனம்

சுஸுகி, இந்தப் புத்தகத்தில் கற்றுக்குட்டியின் மனத்தை (Beginner’s Mind) விரிவாக அலசியிருக்கிறார். ஜென் பயிற்சியின் நோக்கமே எளிமையான, தூய்மையான, திறந்த மனத்தைப் பெறுவதுதான் என்று விளக்குகிறார் அவர். “உங்கள் மனம் காலியாக இருந்தால், அது எப்போதும் எதற்கும் தயாராக இருக்கிறது. அது அனைத்துக்கும் திறந்திருக்கிறது. கற்றுக்குட்டி மனம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. எல்லாம் தெரிந்த மனமோ குறைவான சாத்தியங்களையே கொண்டிருக்கிறது” என்று சொல்கிறார் அவர். ஒரு சாமானிய மனம் ஏதாவது ஒன்றைச் சாதிக்கும்போது தன்னைத்தானே வாழ்த்திக்கொள்கிறது. ஆனால், இது தன்னை மையப்படுத்தும் எண்ணங்களை உருவாக்கிவிடுவதால் கற்றலைச் சாத்தியமில்லாமல் செய்துவிடுகிறது.

பரந்து விளங்கும் பிரபஞ்ச மனத்தின் ஒரு வெளிப்பாடு மட்டுமே தான் என்பதை உணரும்போது கற்றுக்குட்டி மனம், ‘நான்’-க்கு அப்பால் கடந்துவிடுகிறது. இது இயற்கையாகவே பரிவை நம்மில் ஏற்படுத்தக்கூடியது. அது நல்லது, கெட்டது, ஏற்றுக்கொள்ளக்கூடியது, ஏற்றுக்கொள்ள முடியாதது என இரட்டைகளாகச் சிந்திப்பதிலிருந்து வெளியேறிவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக அது எப்படி இருக்கிறதோ அப்படியே அந்தத் தருணத்தின் முழுமையில் கவனம் குவிகிறது. வாழ்க்கையைக் குழப்பமானதாகவும், அமைதியற்றதாகவும் உணர்பவர்களுக்கு இந்த ‘Zen Mind, Beginner’s Mind’ புத்தகம் பல எளிமையான தீர்வுகளை முன்வைக்கிறது.

Frogrightஒழுங்கான மனம்

ஜென் பயிற்சிகளில் முக்கியமான தியான பயிற்சியாக ‘ஜாஜென்’ (Zazen) பயிற்சி கருதப்படுகிறது. இந்தப் பயிற்சி ஒரு குறிப்பிட்ட மனநிலையை அடைவதற்காகச் செய்யப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தப் பயிற்சியைச் செய்வதால் மனம் அலைந்து திரியவே செய்யும். இந்த ‘ஜாஜென்’ தியான பயிற்சியைச் செய்வதற்காக எப்படி ஆசனத்தில் அமர்வது என்பதை எளிய வழிமுறைகளை இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் சுஸுகி.

இந்த ஆசனம், தொடர்ச்சியான எண்ணங்களின் போராட்டத்திலிருந்து மனத்தை விடுவிக்கிறது. அத்துடன், இந்த ‘ஜாஜென்’ பயிற்சியில் மூச்சுப் பயிற்சியும் முதன்மையாகத் திகழ்கிறது. இந்த ‘ஜாஜென்’ பயிற்சியை மேற்கொள்வதால் ‘சிறிய மனம்’ ‘பெரிய மனம்’ –ஆக உருவெடுப்பதாகச் சொல்கிறார் சுஸுகி. இந்தத் தியானப் பயிற்சியில் நாம் எந்த அளவுக்கு நேரம் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது உலகம் ஒழுங்கானதாக மாறுகிறது என்று சொல்கிறார் அவர்.

தவளைகளைக் கவனிப்போம்

இந்த ஜென் தியானப் பயிற்சியைச் செய்வதால், நாம் தனிச்சிறப்புடையவர்கள் என்ற செருக்கு குறைகிறது. ஆனால், இந்தப் பயிற்சியை எதையும் எதிர்பார்க்காமல் செய்யச் சொல்கிறார் அவர். தியானம் என்பது சுய வெளிப்பாட்டின் உயர்ந்த வடிவம் என்று விளக்குகிறார் அவர். இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. திரும்பச் செய்தல், இயல்பு மாறாநிலை, ஒரேமாதிரியாக இருப்பது ஆகியவற்றை ஜென் பாதையைப் பின்பற்றுவதற்கான வழிகளாக இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

7chgow_Zen mind1

தவளைகள் அமர்ந்திருப்பதை உதாரணமாக வைத்து இந்தப் பயிற்சியை விளக்குகிறார் சுஸுகி. தவளைகள் தாங்கள் சிறப்பானவர்கள் என்று உணராமல்தான் அமர்ந்திருக்கின்றன. அவை அப்படி அமர்ந்திருந்தாலும் அவற்றின் அடையாளம் எந்தவிதத்திலும் மாறுவதில்லை. அவை தவளைகளாகவே இருக்கின்றன. இந்தப் பயிற்சியால் நம்மால் உலக இயல்புகளை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார் அவர்.

‘Zen Mind, Beginner’s Mind’ என்ற இந்தப் புத்தகம், நாம் துன்பமாகக் கருதும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையிலிருந்து இன்பம் காண முயல்வதே இந்த உலகில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்பதை விளக்குகிறது.

ஷுன்ரியு சுஸுகி ()

1905-ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தார். இவர் தன் பன்னிரண்டு வயதில் ஜென் குரு ‘Gyokujun So-on-roshi’ யால் மாணவராகச் சேர்த்துகொள்ளப்பட்டார். இவர் கோமாஸோவாவில் உள்ள பவுத்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1959-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பயணம்செய்த இவர், அங்கேயே சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரத்தில் தங்கிவிட்டார். அமெரிக்காவின் முதல் ஜென் பயிற்சி விஹாரத்தை இவர்தான் நிறுவினார். இவர் 1971-ம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ ஜென் மையத்தில் மறைந்தார்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x