

அன்னாவரம்: திருவண்ணாமலையை போன்று ஆந்திராவின் அன்னாவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயணர் வைணவ கோயிலிலும் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
அக்னி திருத்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாகிறது.
சாகண்டி கோட்டேஸ்வர ராவ் என்ற ஆன்மிக சொற்பொழிவாளர், திருவண்ணாமலையின் மகிமையை தெலுங்கு மொழியில் ஆந்திரா, தெலங்கானாவில் பரப்பினார். இதன் காரணமாக இரு மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இவர்கள் திருவண்ணா மலையை ‘அருணாச்சலம்’ என்று அழைக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலையை போன்று ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள அன்னாவரம் சத்யநாராயணர் கோயிலிலும் கிரிவலம் பிரசித்தி பெற தொடங்கி உள்ளது. இக்கோயிலில் இதுவரை சத்ய நாராயண விரத பூஜை மட்டுமே பிரபலமாக இருந்து வந்தது. தற்போது பவுர்ணமி கிரிவலமும் பக்தர்களிடையே புகழ் பெற்று வருகிறது. ஆந்திராவில் தெலுங்கு கார்த்திகை மாதம் 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது. இதில் வரும் பவுர்ணமி, கார்த்திகை பவுர்ணமியாக நேற்று கொண்டாடப்பட்டது.
11.1 கி.மீ தொலைவு கிரிவலம்: இதன்காரணமாக அன்னா வரம் சத்யநாராயணர் கோயிலில் திரளான பக்தர்கள் குவிந்து 11.1 கி.மீ தொலைவுக்கு கிரி வலம் சென்றனர். சுமார் 3 லட்சம் பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.