

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா டிச .30-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, 2025 ஜன. 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் டிச. 31-ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜன. 9-ம் தேதி மோகினி அலங்காரம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு விழா ஜன. 10-ம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து, ஜன. 16-ம் தேதி திருக்கைத்தல சேவை, 17-ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி, 19-ம் தேதி தீர்த்தவாரி, 20-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரங்கால் மண்டபத்தில் கோயில் பட்டர்கள் வேதமந்திரங்கள் கூறினர். மேளதாளங்கள் முழங்க, கோயில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது.
பின்னர், பந்தல் காலை கோயில் பணியாளர்கள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் மாரியப்பன், அர்ச்சகர் சுந்தர் பட்டர்,அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.