

சென்னை: திருப்பதியை போன்று தர்மஸ்தலமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின்பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக விஜய யாத்திரையில் இருக்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 9-ம் தேதி தர்மஸ்தலத்துக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு தர்மஸ்தலத்தின் தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே தலைமையிலான நிர்வாகிகள் தர்மஸ்தலத்தின் நுழைவாயிலில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடைபெற்ற வரவேற்பு சபையில் சுவாமிகள் கன்னட மொழியில் அருளுரை வழங்கினார். காஞ்சி காமகோடிபீடத்துக்கும் தர்மஸ்தலத்துக்கும் இருக்கும் நீண்ட கால தொடர்பு குறித்து விளக்கமளித்த சுவாமிகள், “தர்மத்தை பாதுகாத்தால் தர்மம் நம்மை பாதுகாக்கும். தர்மத்தை பாதுகாத்து பாரத நாட்டுக்கே மகுடமாக விளங்கும் தர்மஸ்தலத்தில் பக்தி, சேவையுணர்வு, அனுபவம், நேர்மையான தலைமை, கவுரவம், புகழ் ஆகிய விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் உள்ளன. தர்மஸ்தலத்தில் தர்மத்வாரம் (தர்மத்தின் தலைவாசல்) அமைந்துள்ளது. திருப்பதி போன்று தர்மஸ்தலமும் வளர்ச்சி அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.
பின்னர் வேதபாட சாலைக்கு விஜயம் செய்து வேத விற்பன்னர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். தர்மஸ்தலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய அன்னதானக் கூடத்தை, சுவாமிகள் நவ. 14-ம் தேதிதொடங்கி வைக்க உள்ளார்.