ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்

ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்
Updated on
1 min read

திருமலை: திருமலையில் நேற்று ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் முடிந்த பிறகு வெகு விமரிசையாக புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

இதனையொட்டி நேற்று திருமலையில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் காலை உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை உற்சவ மூர்த்திகளுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 5 டன், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தலா ஒரு டன் வீதம் மொத்தம் 7 டன் எடையில் முல்லை, மல்லி, கனகாம்பரம், சாமந்தி, ரோஜா, சம்பங்கி, துளசி, தவனம் போன்ற17 வகையான மலர்கள் புஷ்ப யாகத்துக்கு பயன்படுத்தப்பட்டன.

முன்னதாக மலர்கள் நிரப்பிய கூடைகளை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கடைய்ய சவுத்ரி தலைமையில் கோயில் இணை அதிகாரி லோகநாதம், தோட்டக்கலை துறை இணை இயக்குநர் நிவாசுலு, மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உட்பட 300-க்கும் அதிகமான வாரி சேவகர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in