

சென்னை/காஞ்சி/திருப்போரூர்: வடபழனி, வல்லக்கோட்டை, திருப்போரூர், திருத்தணி, சிறுவாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயிலில் நேற்று இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவம் முடிந்ததும் மொய் எழுத பக்தர்கள் அழைக்கப்பட்டனர்.
பக்தர்கள் மொய் எழுதியதும் அதற்கான ரசீது மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் இரவு 8 மணிக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று வடபழனி முருகன் கோயிலில் மங்களகிரி விமான புறப்பாடு, சொக்கநாதர் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்தி புறப்பாடு, வடபழனி ஆண்டவர் புறப்பாடு, அருணகிரி நாதர் புறப்பாடு ஆகியவை நடக்க உள்ளது. இதேபோல், பாரிமுனை கந்தக்கோட்டம் முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோயில், வியாசர்பாடி சர்மா நகர் பாலதண்டாயுதபாணி கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காஞ்சி மாவட்டத்தில், வல்லக்கோட்டை முருகன் கோயில், இளையனார் வேலூர் முருகன் கோயில், நிமந்தக்காரத் தெரு முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. குமரக்கோட்டம் முருகன் கோயிலில் பாலாலயம் நடைபெற்று முடிந்துள்ளதால் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெற்றன.
திருப்போரூர் நகரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்தசஷ்டியின் நிறைவு உற்சவமாக கருதப்படும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்க சிறப்பு வாத்தியங்களுடன் 6 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் தெய்வானை, முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், தம்பதி சமேதராய் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதில், திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இதேபோல், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
லட்சார்ச்சனை: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் தாழக்கோயில் வளாகத்தில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு லட்ச்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் உட்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோயிலில் நேற்று காலை 10 மணியளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.
இதில், கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத கல்யாண உற்சவர் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்.