

சென்னை: சிருங்கேரி மடத்தின் மேற்கு மாம்பலம் கிளையில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், அக். 28-ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் (உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகே) உள்ள சுதர்மா இல்லத்தை வந்தடைந்தார். நவ.13-ம் தேதி வரை சென்னையில் முகாமிட உள்ள சுவாமிகள், தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், சுவாமிகள் நேற்று முன்தினம் சென்னை பழவந்தாங்கலில் அமைந்துள்ள அபிநவ கணபதி கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிருங்கேரி மடம் சார்பில் இக்கோயில் 1998-ம் ஆண்டு கட்டப்பட்டு, சிருங்கேரி மடத்தின் 36-வது பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோயிலில் சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம்
ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் இக்கோயிலில் குடமுழுக்கை நிகழ்த்தினார். பின்னர் ஆதம்பாக்கம் கற்பக விநாயகர் கோயிலில் அன்னை சாரதாம்பாளை தரிசித்தார். நங்கநல்லூர் மேதா குருகுலத்தில் மாணவர்களின் கல்வித் திறன் குறித்து கேட்டறிந்த சுவாமிகள், ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை மேற்கு மாம்பலம், கிருபா சங்கரி தெருவில் உள்ள சாரதாம்பாள் கோயிலுக்கு விஜயம் செய்த சுவாமிகள், அங்கு ஸ்ரீ சந்திரமவுலீஸ்வர பூஜை செய்தார். நேற்று காலை ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகியோருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்த சுவாமிகள், பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நிகழ்த்தினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நவ. 8-ம் தேதி (இன்று) தி.நகரில் உள்ள பாரதி வித்யாஸ்ரமில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் பங்கேற்க உள்ளார்.
பாரம்பரியமிக்க மேற்கு மாம்பலம் கிளை: 1977-ம் ஆண்டு சென்னை மேற்கு மாம்பலத்துக்கு விஜயம் செய்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் மற்றும் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், கிருபா சங்கரி தெருவில் சிருங்கேரி மடத்தின் கிளை அமைக்க முடிவு செய்தனர்.அதன்படி, 1979-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி, ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் சந்நிதிகள் மற்றும் வழிபாட்டு மையம் அமைக்கப்பட்டு, 1982-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அன்று முதல் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஷரன் நவராத்திரி, சங்கர ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.