

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று (நவ.2) தொடங்குகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டிவிழாவையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருள்கிறார். யாகசாலை பூஜைகளுக்குப் பின்னர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின்னர், யாகசாலையில் ஜெயந்திநாதருக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர், தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, பக்தர்கள் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட சண்முகவிலாச மண்டபம் சென்றடைகிறார். மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி, பிரகாரத்தை வலம் வந்து கோயில் சேர்கிறார்.
கந்த சஷ்டி விழா வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி மாலை கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். வரும் 8-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க 18 இடங்களில், மொத்தம் 1,11,118 சதுரஅடி பரப்பில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே தங்கியுள்ளனர். மேலும், தனியார் தங்கும் விடுதிகள், மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், மடங்களில் தங்கி விரதமிருப்பதற்காக நேற்று காலை முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
யாகசாலை பூஜைகள், தங்கதேர் வீதியுலா ஆகியவற்றை பக்தர்கள் பார்ப்பதற்காக கோயில் வளாகத்தில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் சென்னை தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 7-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவிருப்பதால், திருச்செந்தூருக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் 6-ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும், வரும் 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து பயணத்துக்கு www.tnstc.in என்ற இணையதளம், tnstc என்ற செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 7-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவிருப்பதால், திருச்செந்தூருக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் 6-ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும், வரும் 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து பயணத்துக்கு www.tnstc.in என்ற இணையதளம், tnstc என்ற செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.