

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு ஊஞ்சல் உற்சவம் அக்.20 அன்று தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்துக்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவத்தின் 7-ம் நாளான அக்.26-ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளுளி இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்துக்கு தீர்த்தப்பேரர் உடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையடுத்து அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனமும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும் கண்டருளினார். இரவு 9 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.