Last Updated : 20 Jun, 2018 07:16 PM

 

Published : 20 Jun 2018 07:16 PM
Last Updated : 20 Jun 2018 07:16 PM

நலம் தரும் நந்தி ஆலயங்கள்

 

ந்தியாவில், புகழ்பெற்ற நந்திகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக, தென்னிந்தியாவில் நந்திகள் அமைந்துள்ள கோயில்கள் நிறைய உண்டு. சிவபெருமான் ஆலயங்களில் சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும். தென்னிந்தியாவின் சில புகழ்பெற்ற நந்திகளை அறிந்துகொள்வோம்.

தமிழகத்தில் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள நந்தி தமிழகத்திலேயே மிகப் பெரியது. இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. பெரிய கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. இதைப் போலவே மைசூருவில் சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்திருக்கும் சாமூண்டீஸ்வரி மலையில் பிரம்மாண்ட நந்தி ஒன்று உள்ளது. இது இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நந்திகளில் ஒன்று.

இதேபோல மைசூருக்கு அருகே நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஸ்ரீ கண்டேஸ்வரா ஆலயத்திலும் பெரிய நந்தி உள்ளது. வழக்கத்துக்கு மாறாக பிரதானச் சன்னிதியில் இறைவனை நோக்கியிராமல் சன்னிதிக்கு இடதுபுறமாக வாசலைப் பார்த்தபடி இந்த நந்தி உள்ளது. கருங்கல்லில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நந்தியை ‘அகங்கார நந்தி’ என்று அழைக்கிறார்கள். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானை இந்த நந்தி காப்பதாக ஐதீகம். இந்தத் தலத்தில் ஈசனுக்கு சுக்கு, சர்க்கரை, வெண்ணெய் மூன்றும் கலந்து படையலிட்டு வணங்குகிறார்கள்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நந்தியால் என்ற பகுதியில் 15 கி.மீ. சுற்றளவில் ஒன்பது நந்திகளின் கோயில்கள் அமைந்துள்ளன. பிரதம நந்தி, சூர்ய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, மகா நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி என்று இந்தக் கோயில்களை அழைக்கிறார்கள். இங்கே ஒவ்வொரு பிரதோஷ காலத்துக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆந்திராவிலேயே மிகப் பெரிய நந்தியானது லேபாட்சி எனும் ஊரில் அமைந்துள்ளது. வீரபத்ரா கோயிலில் அமைந்துள்ள இந்த நந்தி 15 அடி நீளம், 27 அடி உயரம் கொண்டது. மிகவும் பழமையான நந்தியாகவும் இது அறியப்படுகிறது.

பிரதோஷம் அன்று நந்தி வழிபாடு செய்வது மிகவும் விஷேசமானது. பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனம் ஆடுகிறார் என்பது நம்பிக்கை. நந்திக்கு அறுகம்புல் மாலையை அணிவித்தும் நெய் விளக்கேற்றியும் வழிபடலாம். வில்வ இலைகளால் நந்தியை அலங்கரித்து வழிபடுவதும் நலம் சேர்க்கும். முடிந்தால், சிவப்பு அரிசியில் வெல்லம் கலந்தும் நந்திக்கு படையிலிட்டு வணங்கலாம். நந்தியைக் கொம்புகளுக்கு மத்தியில் நின்று வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கினால், பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x