

சென்னை: சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் அக்.28-ம் தேதி முதல் நவ.13-ம் தேதி வரை சென்னையில் முகாமிட உள்ளார்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், சென்னையில் 14 நாட்கள் முகாமிட உள்ளார். சென்னை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அக்.28-ம் தேதி மாலை காஞ்சிபுரம் வழியாக சென்னை வர உள்ளார். நவ. 13-ம் தேதி வரை சென்னையில் தங்கியிருந்து பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
சிருங்கேரி மடத்தின் கிளை மடங்கள் அமைந்திருக்கும் சென்னை தி.நகர் பாரதி வித்யாஸ்ரமம், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி, நங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோயில் ஆகிய இடங்களில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். மேலும் அடையார், நங்கநல்லூர், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம்போன்ற இடங்களில் அருளுரை வழங்க உள்ளார். சென்னை மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்திலும் (உட்லேண்ட்ஸ் ஹோட்டல் அருகே), தி.நகர் பாரதி வித்யாஸ்ரமத்திலும் தங்க உள்ளார். சுவாமிகளின் வருகையை ஒட்டி, உலக நன்மை மற்றும் அமைதிக்காக சஹஸ்ர சண்டி ஹோமம், சமுதாய நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மடத்தின் தலைமை அதிகாரி பி.ஏ.முரளி தலைமையில் பாரதி வித்யாஸ்ரமத்தின் சேர்மன் ஏ.கிருஷ்ணமூர்த்தி, செயலர் ஜெ.எஸ்.பத்மநாபன், மேற்கு மாம்பலகிளைச் செயலர் வித்யா சங்கரகிருஷ்ணன், கல்வியாளர் காந்த் நரசிம்மன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.