

சீடன் குருவிடம் கேட்டான்: “ஐயா எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறீர்கள். அதே சமயம் சாதகம் செய்ய வேண்டும், தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்களே?” என்று கேட்டான்.
குரு புன்சிரிப்புடன் அவனைப் பார்த்தார். சீடன் தொடர்ந்தான்.
“எல்லாம் அவன் செயல் என்றால், அதாவது இறைவன் செயல் என்றால், நாம் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்? அவனே பார்த்துக்கொள்ள மாட்டானா?” என்று கேட்டான் சீடன்.
குரு சீடனை அழைத்துக்கொண்டு சந்தைக்குப் போனார். அங்கே ஒரு கடை அருகே ஒரு சாமியார் உட்கார்ந்திருந்தார். அவர் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார். உடை என்பது பேருக்குத்தான் இருந்தது. ஆண்டுக்கணக்கில் கத்தியைக் காணாத தலை முடி, மீசை,
தாடி. உடல் முழுவதும் அழுக்கு. முகத்தில் சிரிப்பு.
குரு அந்தச் சாமியாரைத் தாண்டிச் சென்று சாலையைக் கடந்து எதிர்ப்புறத்தில் நின்றுகொண்டார். சீடனும் அவர் பக்கத்தில் நின்றான்.
அப்போது எதிரில் இருந்த சாமியாருக்கு யாரோ ஒருவர் வாழைப்பழம் கொடுத்துவிட்டுப் போனார். சாமியாரும் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்.
கடைக்காரர் அந்தச் சாமியார் வாழைப்பழம் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டார். தன் கடையிலிருந்து அவர் திருடிச் சாப்பிடுவதாக நினைத்துவிட்டார். கோபத்துடன் வந்து அந்தச் சாமியாரை அறைந்துவிட்டார். சாமியார் கீழே விழுந்தார். சீடன் உணர்ச்சிவசப்பட்டு அவரை நோக்கி ஓட முயன்றான். குரு அவனைத் தடுத்து நிறுத்தினார்.
கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவர் அந்தச் சண்டையில் தலையிட்டார். “ஏன் சாமியாரை அடிக்கறே?” என்றார்.
“சாமியாரா இவர்? திருட்டுச் சாமியார்” என்றார்
அடித்தவர்.
“அவர் திருடுவதை நீ பாத்தாயா? அவர் தேமேன்னு இங்க உட்கார்ந்திருக்கிறார். அவரைத் திருடன் என்று சொல்லலமா? யாராவது வாங்கிக் கொடுத்திருப்பார்கள்…”
என்று சொன்னபடி சாமியாரைத் தூக்கி நிறுத்தி ஆசுவாசப்படுத்தினார். குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். பணம் கொடுத்து மேலும் இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக் கொடுத்தார். பிறகு அவர் சென்றுவிட்டார்.
குரு “வா, அந்தச் சாமியாரைப் பார்க்கலாம்” என்று சொன்னபடி மீண்டும் எதிர்ப்புறத்துக்குச் சென்றார். சாமியார் அமைதியாக உட்கார்ந்து பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். குரு அவரை நெருங்கி, “சாமி, பழம் யார் கொடுத்தது?” என்று கேட்டார்.
“எழுப்பி உட்கார வைத்தவன் பழம் கொடுத்தான்” என்றார்.
“எழுப்பி உட்கார வைத்தது யார்?”
“என்னை அடித்தவன் எழுப்பி உட்கார வைத்தான்.”
“யாரு அடித்தது?”
“பழம் கொடுத்தவன்தான் அடித்தான்”
“இப்ப நீங்க யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?”
“பழம் கொடுத்து, அடித்து, தண்ணீர் கொடுத்து, மறுபடியும் பழம் கொடுத்தவனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.”
குரு அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டார்.
சீடன் அமைதியாகப் பின்னால் சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு குரு சொன்னார்:
“இந்தச் சாமியாரைப் போன்றவர்களுக்கு எல்லாம் அவன் செயல். அடித்தவன், காப்பாற்றியவன் என்ற வித்தியாசமே அவருக்குத் தெரியாது. நல்லது, கெட்டது, நீ, நான், அவன் இப்படி எந்த வித்தியாசமும் அவருக்குத் தெரியாது. இந்த உலகில் எல்லாமே, எல்லாருமே அவருக்கு ஈசனின் வடிவம்தான். அவரைப் போன்றவர்கள் எல்லாம் அவன் செயல் என்று சும்மா இருக்கலாம். அந்த நிலையை அடையாத சாதாரண மனிதர்கள் சாதகத்தில் ஈடுபட வேண்டும்.”