

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நேற்று சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். வாகன சேவைகளில் 16 மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 6-ம் நாள் தங்க ரத ஊர்வலம், 8-ம் நாள் தேரோட்ட நிகழ்ச்சியிலும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில், 9-ம் நாளான நேற்று காலை, கோயில் அருகே உள்ள புஷ்கரணியில் (குளத்தில்) வராக சுவாமி திருக்கோயில் அருகே உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை குளக்கரையில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். இதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனகோஷமிட்டவாறு புனித நீராடினர்.இதில் ஜீயர்கள், தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ்,கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நேற்று மாலையில் பிரம்மோற்சவ கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
சக்கர ஸ்நான நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், விஜிலென்ஸ், காவல் துறை மற்றும் பலரின் கூட்டு முயற்ச்சியால் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் எந்தவொரு பிரச்சினையும் இன்றிவெகு சிறப்பாக நடைபெற்றது. பிரம்மோற்சவத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன தேவஸ்தானத்தின் ஒவ்வொரு துறையினரும் வெகு சிறப்பாக செயல்பட்டனர்.
ஸ்ரீவாரி சேவகர்களும் பக்தர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கினர். கருடசேவைக்கு 3.5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வாறு நிர்வாக அதிகாரி சியாமள ராவ் கூறினார்.