

lததென்காசி: குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி தேரோட்டம் இன்று (அக்.12) நடைபெற்றது. விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஐப்பசி விசு திருவிழா கடந்த 8-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (அக்.10) இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (அக்.12) நடைபெற்றது. விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். இதையடுத்து, காலை 9.15 மணிக்கு தேரோட்டம் தொடங்யிது. நான்கு தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக சித்திரை சபை ரத வீதிகளில் உலா வந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவை முன்னிட்டு நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபராதனை 14-ம் தேதி மாலையில் நடைபெறுகிறது. வருகிற 15-ம் தேதி சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபரதனை நடைபெறுகிறது. 17-ம் தேதி காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறுகிறது.