

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நேற்று இரவு பெரிய பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். கருட சேவையையொட்டி ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கோயிலுக்கு திருக்குடை வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபெருங்கோயிலுடையான் அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் கருட சேவையையொட்டி நேற்று இரவு பெரிய பெருமாள் தங்க கருட வாகனத்திலும், பெரியாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் முதல்முறையாக திருக்குடையை கோயிலுக்கு வழங்கினார். மணவாள மாமுனிகள் மடத்தில் இருந்து மாட வீதிகள் வழியாக திருக்குடை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, வடபெருங்கோயிலுடையான் சந்நிதியில் வழங்கப்பட்டது.
இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், பாஜக மாவட்டத் தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.