

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவத் தின் 4-ம் நாளாக நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து மாலையில் திருமஞ்சன சேவை நடைபெற்றது. இரவு, சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலை யப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று கருட சேவை: பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருள உள்ளார். மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கருட வாகன சேவை நடைபெறும். இதில் தங்க கருட வாகனத்தில் மலையப்பர் கம்பீரமாக 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
பாதுகாப்பு பணிகளில் 5,000 போலீஸார் ஈடுபட உள்ளனர். 3,000 அரசுப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. மாட வீதிகளில் 24 மணி நேரமும் குடிநீர், பால், டீ, காபி, சிற்றுண்டி மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் 9 ஆயிரம் வாகனங் களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட் டுள்ளது. பைக்குகள் நேற்று இரவு 9 மணி முதலே திருமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பைக்குகள் திருமலைக்கு அனுமதிக்கப்படும் என தேவஸ் தானம் அறிவித்துள்ளது.
ஆண்டாள் சூடிய மாலை: ஒவ்வொரு பிரம்மோற்சவத்திற் கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மலர் மாலையும், கிளியும் திருமலையை வந்தடையும், இதனை கருடசேவையன்று உற்சவர் அணிந்து மாட வீதிகளில் வலம் வருவார். இந்த மலர் மாலை மற்றும் கிளியை கூடையில் சுமந்தபடி வில்லிப்புத்தூரில் இருந்து புறப்பட்ட அர்ச்சகர்கள், கோயில் அதிகாரிகள் திருமலையை வந்தடைந்தனர். திருப்பதி கோயில் ஜீயர்களிடமும் நிர்வாக அதிகாரி சியாமள ராவிடமும் இதனை ஒப்படைத்தனர். இதுபோன்று சென்னை யில் இருந்து திருக்குடைகளும் திருமலை வந்து சேர்ந்தன. இவையும் இன்று நடைபெறும் கருடசேவையில் பயன்படுத்தப்படும்.