மோகினி திருக்கோலம் | வேண்டும் வரம் அருளும் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன், பொருளாதாரத்தில் மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் தன்னை உயர்த்திக் கொண்டு இறைவனுடன் கலக்க வேண்டும். இந்த மனித பிறப்பின் அடிப்படைத் தத்துவத்தை விளக்கும் பொருட்டே ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வைப்பது வழக்கம். அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப 3, 5, 7, 9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம்.
முதல் படியில் ஓரறிவு உள்ள உயிர்பொருட்களை (புல், செடி, கொடி) உணர்த்தும் பொம்மைகளையும், இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகளையும், மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு பொம்மைகளையும் வைக்க வேண்டும், நான்காவது படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்கு பொம்மைகள், ஆறாவது படியில் ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள், ஏழாவது படியில் மகரிஷிகளின் பொம்மைகள், எட்டாவது படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலர்களின் பொம்மைகள், ஒன்பதாவது படியில் பிரம்மா, சிவன் போன்ற தெய்வ பொம்மைகளை வைக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று நிறைவாக தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இவ்வாறு கொலு வைக்க வேண்டும். நவராத்திரி ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் சும்ப நிசும்பர்களை அழித்த மோகினியை வழிபட வேண்டும். 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும். முன்னதாக கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். பந்துவராளி, வசந்தா ராகங்களில் பாடல்களைப் பாடி, கதம்பம், மனோரஞ்சித மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சர்க்கரை பொங்கல், கடலைப் பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம். பூம்பருப்பு கண்டல் ஆகியவற்றில் முடிந்ததை நைவேத்தியம் செய்ய வேண்டும். நவராத்திரி ஐந்தாம் நாள் பூஜையால் நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
