பூமியை அகழ்ந்தால் வானமாமலை

பூமியை அகழ்ந்தால் வானமாமலை
Updated on
2 min read

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வைணவத்தில் ஸ்ரீமன் நாராயணனின் அருளுக்கு நாம சங்கீர்த்தனமும் சரணாகதியுமே உன்னத வழிகளாக ஆச்சாரியார்கள் உரைத்துள்ளனர்.

ஆழ்வார்திருநகரியை ஆண்ட காரி மன்னனுக்கு நீண்ட காலமாகியும் புத்திரபாக்கியம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. தன்னைக் காணவந்த அந்தணரின் யோசனைப்படி திருக்குறுங்குடிக்கு மனைவியுடன் சென்று, அழகிய நம்பிராயரை மனமுருகி வழிபட்டு வந்தார். ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் சுவாமி, ‘‘எப்படிப்பட்ட புத்திரன் வேண்டும்?’’ என்று வினவ, ‘‘சாட்சாத் உங்களைப் போன்றே எனக்கு ஒரு மகவு வேண்டும்’’ என்று விண்ணப்பித்தார் காரி.

அவ்வாறே அருளுவதாக உரைத்த நம்பிராயர், ‘‘இங்கிருந்து கிழக்குத் திசையில் சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும். அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருப்பான். அந்த இடத்தில் பூமியை அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். கேட்டதை அருளுவான்” என்றுரைத்தார்.

இதன்படி மன்னன் அவ்விடத்தைத் தோண்டியபோது, வானமாமலைப் பெருமாள் வெளிப்பட்டார். நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவருக்கு ஆலயம் எழுப்பி அவரை பிரதிஷ்டை செய்து காரி வழிபட்டார். நம்பிராயர் அருளியபடியே காரி மகாராஜனுக்குப் புத்திரராக நம்மாழ்வார் அவதரித்தார். திருவாய்மொழியில், ‘நோற்ற நோன்பிலேன்’ எனத் தொடங்கும் 11 பாசுரங்கள், வானமாமலைப் பெருமாள் விஷயமாக சுவாமி நம்மாழ்வார் பாடினார். ‘ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்..’ என, பெருமாளிடம் சரண் புகுந்ததால், இத்தலத்தில் சடாரியில் நித்யவாசம் செய்பவராய் விளங்குகிறார் சுவாமி நம்மாழ்வார்.

108 வைணவ திவ்யதேசங்களில் 48-வது திவ்ய தேசமாக இத்தலம் விளங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் அருள்பாலிக்கும் எட்டு தலங்களில் இதுவும் ஒன்று. மூலவர் திருநாமம் வானமாமலை என்ற தோத்தாத்ரி நாதர். உற்சவர் தெய்வநாயகப் பெருமான். தாயார் ஸ்ரீவரமங்கை. கிழக்கு முக மண்டலம். அமர்ந்த திருக்கோலம். தீர்த்தம் சேற்றுத் தாமரை. தலவிருட்சம் மாமரம்.

கருவறையில் ஆதிசேஷன் குடை பிடிக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்களுடன் திருக்காட்சி தருகிறார். ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி, சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் வீற்றிருக்கின்றனர். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புவானவை. வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வாரும் தனிச் சன்னிகளில் அருள் பாலிக்கின்றனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களையும் கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரையும் தரிசிக்கலாம். இத்தலத்துக்குள் திருப்பாற்கடலின் அம்சமான சாபம் நீக்கும் சேற்றுத் தாமரை தீர்த்தம் உள்ளது.

ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி மகாவிஷ்ணுவைச் சுமக்கும் பாக்கியத்தையும் கருடாழ்வார் இங்கு வழிபட்டு வைகுண்ட வாசலில் நிற்கும் பேறையும் பெற்றுள்ளனர். மகாலட்சுமி தாயார் வரமங்கையாக இத்தலத்தில் அவதரித்து, வானமாமலை பெருமாளை கைத்தலம் பற்றியதால் இத்தலம் ஸ்ரீவரமங்கை எனவும் போற்றப்படுகிறது. பங்குனி சித்திரை மாதங்களில் தலா 10 நாள் உற்சவம் பிரசித்தம்.

பாரத தேசத்தின் மிகவும் தொன்மையான வானமாமலை மடம் இங்குள்ளது. பகவத் ஸ்ரீராமானுஜரின் வழிவந்த ஆச்சார்யரான பொய்யிலாத மணவாளமாமுனிகளின் முதன்மை சீடர் முதலாவது வானமாமலை ஜீயர் சுவாமிகளால் 750 ஆண்டுகளுக்குமுன் இது அமையப்பெற்றது.

நூறாண்டு காலத்துக்குப் பிறகு இந்த ஆலயத்தில் 18 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னிதிகளிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மஹாஸம்ப்ரோக்ஷண மஹோத்ஸவம் வரும் ஜூன் 29-ம் தேதி காலை 9.30 மணிமுதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. அன்று இரவில் பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும், ஆண்டாள் கிளி வாகனத்திலும் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

46 யாக குண்டங்களில் 23-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. ‘‘110 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மஹோத்ஸவத்தைக் காண்பது நம் வாழ்நாளில் கிடைக்கப்பெறாத அரிய வாய்ப்பு. உலக அமைதி வேண்டி நடைபெறும் இந்த யாக யக்ஞங்களில் பங்கேற்று பெருமானின் பேரருளைப் பெற வேண்டும்’’ என பக்த கோடிகளுக்கு ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in