Published : 13 Jun 2018 06:01 PM
Last Updated : 13 Jun 2018 06:01 PM

விடுதலையென்னும் மலைப்பாதை

ரம்ஜான் என்ற சொல்லின் வேர் அதன் அரபிச் சொல்லான ரமிடாவில் இருக்கிறது. அதன் பொருள் தகிக்கும் வெப்பம். பசியாலும் தாகத்தாலும் ஏற்படும் உஷ்ணத்தையும் ஒருவரது கடந்த கால பாவங்களை எரிப்பதையும் குறிப்பதாக அது உள்ளது. பசித்து விழித்திருப்பதன் வாயிலாக உடலின் நச்சுகளைப் போக்கித் தூய்மைப்படுத்துவதாகவும் பேராசை, வெறுப்பு, தீங்கு ஆகியவற்றைக் களைந்து ஆன்மாவைப் புதுப்பிக்கும் காலகட்டமாகவும் ரம்ஜான் மாதம் உள்ளது.

ரம்ஜான் மாதம் பத்து, பத்து நாட்களாக மூன்று அஸ்ரா-க்களாகப் பரிக்கப்பட்டுள்ளது. முதல் அஸ்ரா ரஹ்மாஹ் என்று அழைக்கப்படுகிறது. அதன் பொருள் கடவுளின் கருணை. இரண்டாவது அஸ்ரா, மக்ஃபிரா. இதன் பொருள் கடவுளின் மன்னிப்பு. மூன்றாவது அஸ்ராவின் பெயர் நஜா. நஜாவின் பொருள் விமோசனம். முதல் பத்து நாட்கள் அல்லாவின் கருணை வேண்டப்படுகிறது. அடுத்த பத்து நாட்கள் அல்லா மன்னிப்பை அருளும் நாட்கள். அடுத்த பத்து நாட்கள் நரகத் தீயிலிருந்து மனிதர்கள் விமோசனம் அடையும் நாட்கள்.

ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்னர், நபிகள் நாயகத்துக்கு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட நாள்தான் ரம்ஜானாகக் கொண்டாடப்படுகிறது. நோன்பு, இஸ்லாமின் உயிர்த்துவ அங்கமாக உள்ளது. உணவு, நீர், பாலுறவு, தீய எண்ணங்கள், தீய செயல்கள் என எல்லாவற்றிலிருந்தும் விலகும் நோன்பு அது. விடியலிலிருந்து நாள் இருள்வதுவரை கடைப்பிடிக்கப்படுவது;

இதைத் தொடர்ந்து ஒரு முஸ்லிம் ஷரியா எனப்படும் நீதி நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இது வெறுமனே குற்ற, குடிமையியல் சட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல; ஆயிரத்து 400 வருட அனுபவங்களின் அடிப்படையில் புதிய சூழல்களுக்கேற்பத் தன்னை உருமாற்றிக்கொண்ட நுட்பமான அற, நெறி, சமய வழிகாட்டுதல்களும் ஆகும்.

ஆன்மிகரீதியான புத்துயிர்ப்பை ஒவ்வொருவரும் தன் உடலுக்கும் ஆன்மாவுக்கும் வழங்குவதற்கான மாதமாக ரம்ஜானும், ரம்ஜான் பண்டிகை நாளும் விளங்குகிறது. உணவு, பிழைப்பு, வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துக்கங்களாலான சராசரி அன்றாடத்தைத் தாண்டி, மெய்யறிவையும் விழிப்புணர்வையும், தனது இருப்புக்கான காரணத்தையும் தேடுவதற்கான வாய்ப்பை ரம்ஜான் வழங்குகிறது. பெரும்பாலான நமது விருப்பங்களின் அடிப்படை சுயநலம் வாய்ந்ததும் விலங்கு இச்சை சார்ந்ததுமாகும். எத்தனைதான் அவற்றை நிறைவேற்றினாலும் தீராத ஆசைகளாக அவை நீள்கின்றன. நமது அடிப்படை இச்சைகளைப் பரிசீலிக்கவும் குறைந்தபட்சம் அதைக் கடக்க இயலும் என்பதைத் தெரிந்துகொள்வதற்குமான மாதமாக விளங்கிய ரம்ஜான் நாட்களுக்கு நாம் நன்றி சொல்வோம்.

சுய கட்டுப்பாடு, சமநிலையைப் பேணுவதற்கான முயற்சி என்பது மனித குலத்தின் வரலாறு அளவுக்கு நீண்டது. புத்தாக்கம் செய்யப்பட்ட ஆன்மிக ஆற்றல், புதிய உறுதிமொழிகளுடன் விடுதலை என்னும் பெருமலைப் பாதையில் பயணத்தைத் தொடங்குவோம். எத்தனை உயரம் செல்ல முடியுமோ அத்தனை தொலைவிலிருந்து நமது ஆசைகள், கோபதாபங்கள், அன்றாட அச்சங்கள், வெறுப்பு, சந்தேகம் அனைத்தும் மிகச் சிறியதாகத் தெரியத் தொடங்கும்.

- முகைதீன் சிஷ்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x