

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 ஆயிரம் பொம்மைகள் கொண்ட பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவை பக்தர்கள், பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 21 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ நடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவம் முன்னிட்டு நேற்று 21 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இன்று (செப்.3) மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த கொலு வருகின்ற 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒன்பது தினங்களும் இரவு ஒன்பது மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் தீபாதனையும் காட்டப்படும். இந்த கொலுவில் ஸ்ரீநடராஜர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகவிஷ்ணு உள்ளிட்ட அனைத்து சாமிகள், உயிரினங்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்த்துக்கும மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட கொலுவினை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். இது குறித்து கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் கூறுகையில் ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரிணாம வளர்ச்சியை வணங்கக்கூடியாது தான் இந்த நவராத்திரி என்றார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.