

கடலூர்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று (அக்.2) கடலூர் மாவட்ட பொதுமக்கள் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
புரட்டாசி, தை, ஆடி மாதங்களில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த நிலையில் இன்று (அக்.2) புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரையில் கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புனித நீராடி புரோகிதர்கள் முன்னிலையில் முன்னோர்களுக்கு படையிலிட்டு வழிபட்டனர்.
இதேபோல், கடலூர் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆறு, விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் பொது மக்கள் தங்கள் முன்னோர்கள் நினைத்து வழிபாடு செய்து திதி கொடுத்தனர். இதுபோல சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை குளத்திலும் ஏரானமனோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.